Saturday, August 13, 2011

பார்க்காமல் இருக்க முடியவில்லை !!!!! பார்த்தாலும் இருக்க முடியவில்லை !!!!!



தொலைக் காட்சி நாடகங்களும், சீர்கெட்டுப் போகும் குடும்பங்களும்.
Rasmin M.I.Sc


ஒரு நாளைக்கு குறைந்தது ஒரு திறைப்படமாவது ஒளி, ஒலிபரப்பாத சேனலே இருக்க முடியாது. அதே போல் எந்த சேனலில் தொலைக்காட்சி தொடர் நாடகங்கள் இல்லையோ அந்த சேனல்களை வீட்டுப் பெண்கள் பார்ப்பதற்கே விரும்புவதில்லை.

ஆம் திரைப்படத்தின் மூலம் ஒரு நாளைக்கு ஒரு திரைப்படத்திற்கு மூன்று மணி நேரங்கள் வீனடிக்கப்படுகின்றனவென்றால், தொலைக்காட்சித் தொடர்களுக்கு நாளும் பல மணி நேரங்கள் ஒதுக்கப்பட்டு குடும்பமே அமர்ந்து ரசிக்கும் நிலை உருவாகியுள்ளது.

குடும்பப் பெண்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய தொடர்.

இளைஞர்களுக்கான உற்சாகமூட்டும் தொலைக்காட்சித் தொடர் நாடகம்.

இளம் பெண்களின் எண்ணத்திற்கேற்ற தொடர் கதை.

சிறுவர்களை வயப்படுத்தும் தொடர் நாடகம்.

வயோதிபர்களின் வயதுக்கேற்ற நாடகம்.

என்று பல வித்தியாசமான விளம்பரங்களுடன் ஒளிபரப்பப்படுகின்றன இன்றைய நாடகங்கள்.

இந்தியா, இலங்கை போன்ற ஆசிய தமிழ் பேசும் மக்களைத் தாண்டி உலகலவில் பல நாடுகளிலும் இந்த தொலைக் காட்சித் தொடர் நாடகங்கள் பிரபலம் பெற்றுள்ளன.


தொலைக்காட்சித் தொடர் நாடகங்களுக்காக நேரம் ஒதுக்கி, அவற்றை ரசித்துப் பார்க்கக் கூடிய பெண்கள், மறுமை நாளின் நிகழ்வுகளை மனதில் பதித்துக் கொள்ள வேண்டும்.

கற்பனையான கதைகள், பொய்யான தகவல்கள், சமூக சீர்கேடுகள், பழிவாங்கள் தந்திரங்கள், கொலை முயற்சிகள், என்று மனிதனை ஒரு கேவலமான ஜீவனாக காட்ட முனையும் இந்த தொடர் நாடகங்களைப் பார்ப்பவர்கள் இறுதியில் அதை தானும் பின்பற்றும் தீய நிலைக்கு செல்வதை கண் கூடாகக் காணக் கிடைக்கிறது.

தொலைக்காட்சி நாடகம் பார்த்தேன் அதன் படி கொலை செய்தேன்.

நாடகத்தில் வந்ததைப் போல் செய்து பார்க்க எண்ணி தூக்கில் தொங்கினான் மரணித்து விட்டான்.

தொலைக்காட்சித் தொடர் வழியில் எனது கோபத்தை தீர்த்துக் கொண்டேன்.

தவறு செய்துவிட்டு இப்படியெல்லாம் செய்தி வெளியிடுவதைப் தினமும் காணக்கிடைக்கும்.

மாமியாரை பழிவாங்குவது எப்படி?

மருமகளை அடக்குவது எப்படி?

தாயையும், மகனையும் பிரிப்பது எப்படி?

சகோதரர்களுக்கு மத்தியில் பிரச்சினையை உண்டாக்குவது எப்படி? போன்ற அனைத்துக் கேள்விகளுக்கும் பதில் சொல்கிறது இந்த தொலைக்காட்சித் தொடர் நாடகங்கள்.

உலக வழிகாட்டி நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்.

ஒவ்வொரு மனிதனும் எப்படி மரணிக்கிறானோ அப்படியே தான் (மறுமையில்) எழுப்பப் படுவான். அறிவிப்பவர் ஜாபிர் (ரலி) அவா்கள். (நூல் முஸ்லிம் 5126)

நாம் தொலைக்காட்சியைப் பார்ப்பது தவரல்ல அதில் உள்ள நல்ல செய்திகளைப் பார்க்களாம், பார்க்க வேண்டும். ஆனால் தொலைக்காட்சி தொடர் போன்ற பாவமான நிகழ்ச்சிகளைப் பார்க்கும் போது அல்லாஹ்விடம் தண்டனை பெரும் குற்றத்தை நாம் செய்கிறோம் என்பதை மனதில் நினைத்துக் கொள்ள வேண்டும்.

இது போன்ற பாவங்களை செய்து கொண்டிருக்கும் போது (தொலைக்காட்சித் தொடர்களை பார்த்துக் கொண்டிருக்கும் போது) நமது உயிர் பிரிந்தால் நமது நிலை என்னவாகும்?

நாம் எப்படி மரணிக்கிறோமோ அப்படித்தான் மறுமையில் எழுப்பப்படுவோம் என்று அல்லாஹ்வின் தூதர் அவர்கள் குறிப்பிடுகிறார்கள். நமது மரணம் தீமையை செய்து கொண்டிருக்கும் போது நிகழ்ந்தால் கண்டிப்பாக நாம் பாவியாகத்தான் எழுப்பப்படுவோம். ஆதலால் இந்தத் தீய காரியத்தை விட்டும் நாம் நம்தை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.


வீட்டில் வேலைகளை எல்லாம் முடித்து விட்டு ஓய்வாக இருக்கும் போதுதான் இந்த நாடகங்களைப் பார்க்கிறோம் என்று சிலர் தாம் செய்யும் பாவத்திற்கு ஒரு சாக்குச் சொல்வார்கள்.

ஓய்வு நேரத்தை எத்தனையோ நல்ல காரியங்களில் பயன்படுத்த முடியும் ஆனால் அவற்றையெல்லாம் விட்டுவிட்டு இது போன்ற தீய காரியங்களில் பயன்படுத்துவதற்கான வழியாகத் தான் இந்த பதிலை அவர்கள் தயார் செய்திருப்பார்கள்.

பார்க்காமல் இருக்க முடியவில்லை பழகிவிட்டோம், பார்த்தாலும் இருக்க முடியவில்லை பிடித்துவிட்டது இது போன்ற பல பதில்கள் நமது குடும்பப் பெண்களிடம் இருந்து சர்வ சாதாரணமாக வெளிப்படுகின்றன.

குர்ஆன் ஓதுதல்.

மார்க்கம் தொடர்பான மாத இதழ்களை படித்தல்.

சிறந்த புத்தகங்களை வாசித்தல்.

பயான் நிகழ்ச்சிகளை பார்த்தல்.

பிள்ளைகளுடன் விளையாடுதல்.

பிள்ளைகளுக்கு படித்துக் கொடுத்தல்.

தையல் வேலைகளை செய்தல்.

தாய்க்கு உதவிகளை செய்தல்.

உறவினர்களுக்கு உதவுதல்.

மனைவிக்கு தேவையான வேலைகளை செய்து கொடுத்தல்.

நமது சொந்த வேலைகளை செய்து கொள்ளுதல்.

சொந்தங்களுக்கு மார்க்கப் பிரச்சாரம் செய்தல் என்று எத்தனையோ நல்ல காரியங்கள் செய்ய முடியுமான ஓய்வு நேரத்தில் எங்களுக்கு வேலைகள் இல்லை, அதனால் தொலைக்காட்சித் தொடர் பார்க்கிறோம் என்று சர்வ சாதாரணமாக பதில் சொல்லும் தாய்மார்கள் அல்லாஹ்வை பயந்துகொள்ள வேண்டும்.

இரண்டு அருட்கொடைகள் விஷயத்தில் மக்கள் நஷ்டத்திலேயே இருக்கிறார்கள் அவை ஓய்வு நேரமும், ஆரோக்கியமுமாகும். அறிவிப்பவர் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் (நூல் : புகாரி)

ஓய்வு நேரத்தை ஒரு பாக்கியமாக இஸ்லாம் சொல்லித்தருகிறது. ஓய்வு நேரத்தை மிகச் சரியான முறையில் பயன்படுத்தும் போது வாழ்க்கையில் பல வெற்றிப்படிகளை நாம் எட்ட முடியும்.

நபி (ஸல்) அவர்கள் தனது மனைவிக்குறிய வேலைகளை செய்திருக்கிறார்கள், தனது செருப்பை தானே தைத்திருக்கிறார்கள் என்ற செய்திகளையெல்லாம் நாம் ஹதீஸ்களில் பார்க்கிறோம்.

நமது ஓய்வு நேரங்களில் நாம் இது போன்ற காரியங்களில் ஈடுபட்டு நேரத்தை பிரயோஜனமானதாக மாற்றலாம்.


தொலைக்காட்சி தொடர் நாடகங்களினால் ஏற்பட்ட பல விளைவுகள் பத்திரிக்கைச் செய்திகளில் நாம் காணக்கிடைக்கின்றன.

தாய் நாடகம் பார்த்துக் கொண்டிருப்பதை பயன்படுத்தி கடத்தப்பட்ட குழந்தைகள்.

தொலைக்காட்சித் தொடரில் தாய் மூழ்கிப் போய் குழந்தையை மறந்திருந்த நேரம் வீட்டு முன்பிருந்த சாக்கடையில் விழுந்து மரணித்த குழந்தை.

இது போன்ற செய்திகள் தினமும் செய்தித் தாள்களில் வருவதற்கு காரணம் என்ன? கற்பணையகஷாக உருவாக்கப்பட்ட கதைகளில் நம்மை நாம் தொலைத்து நமது பொன்னான நேரத்தையும் தொலைத்து, நமது குடும்பத்தினரின் எதிர்காலம், நமது எதிர்காலம் என்று அனைத்தையும் இழந்துவிடுகிறோம்.


ஈமான் (இறை நம்பிக்கை) அறுபதுக்கும் மேற்பட்ட கிளையாக உள்ளது. வெட்கம் என்பது ஈமானின் ஒரு கிளையாகும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)(நூல்: புகாரி 9)

மனிதனின் மிக முக்கிய குணங்களில் மதிக்கத் தக்க ஒரு குணம் தான் வெட்கம் என்பது இன்றைக்கு யாரெல்லாம் இந்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மூழ்கி இருக்கிறார்களோ அவர்களிடம் இந்த குணம் படிப்படியாக குறைந்துவிடுவதை நாம் காண முடியும்.

அண்ணிய ஆண்களிடம் சாதாரணமாக பேசும் பெண்கள், பெண்களிடம் சாதாரணமாக குழைந்து பேசும் ஆண்கள் என்று அனைவரிடமும் வெட்கம் அற்றுப் போவதற்கு இந்த தொடர்கள் காரணமாக இருக்கின்றன.

அண்ணியை அண்னை என்று நினைக்கிறேன் என்று சொல்லிவிட்டு அண்ணனுக்கு துரோகம் செய்யும், தம்பிகளை உருவாக்கியது இந்த தொலைக்காட்சித் தொடர்கள் தாம்.

கணவனின் தம்பியை என் தம்பியாக நினைக்கிறேன் என்று சொல்லிக் கொண்டு கணவனுக்க மாறு செய்யும் மணைவிகளை உருவாக்கியதும் இந்த தொலைக்காட்சித் தொடர்கள் தாம் என்பதில் எல்லளவுக்கும் சந்தேகம் இல்லை.

"என் மனைவியுடன் ஓர் ஆண் இருக்கக் கண்டால் வாளின் முனையாலேயே அவனை நான் வெட்டுவேன்'' என்று ஸஅத் பின் உபாதா (ரலி) அவர்கள் கூறினார்கள். இந்தச் செய்தி நபி (ஸல்) அவர்களை எட்டிய போது, "ஸஅதின் ரோஷத்தைக் கண்டு நீங்கள் வியப்படைகின்றீர்களாஅல்லாஹ்வின் மீதாணையாக! நான் அவரை விட அதிக ரோஷமுள்ளவன். அல்லாஹ் என்னை விடவும் அதிக ரோஷமுள்ளவன். அல்லாஹ் தன் ரோஷத்தின் காரணத்தால் தான் வெளிப்படையான மற்றும் மறைவான மானக்கேடான செயல்கள் அனைத்தையும் தடை செய்து விட்டான். (திருந்துவதற்கு வாய்ப்பளித்து) விட்டுப்பிடிப்பதை மிகவும் விரும்புபவர் அல்லாஹ்வை விட வேறெவரும் இல்லை. அதனால் தான் நற்செய்தி சொல்பவர்களையும் எச்சரிக்கை செய்பவர்களையும் அல்லாஹ் அனுப்பி வைத்தான். அல்லாஹ்வை விட மிகவும் புகழை விரும்புபவர்கள் வேறெவருமில்லை. அதனால் தான் அல்லாஹ் சொர்க்கத்தை அளிப்பதாக வாக்களித்துள்ளான்'' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: முகீரா பின் ஷுஅபா (ரலி)(நூல்: புகாரி 6846, 7416 )

மனைவி என்பவள் நமக்கு மட்டும் உரிமையானவள், நவீன விற்பனை பொருள் அல்ல மற்றவர்களுக்கும் காட்சிப் படுத்துவதற்கு.

"என் மனைவியுடன் ஓர் ஆண் இருக்கக் கண்டால் வாளின் முனையாலேயே அவனை நான் வெட்டுவேன்'' என்று ஸஅத் பின் உபாதா (ரலி) அவர்கள் கூறினார்களே அவர்களின் ரோஷம் நமக்கு வேண்டாமா? நபியவர்கள் அவர்களை பாராட்டிப் பேசினார்களே அது போல் நாம் மாற வேண்டாமா?


சமுதாயத்தில் நடப்பதைத் தானே காட்டுகிறார்கள் என்று தன்னிலை விளக்கம் சொல்பவர்கள் புரிந்து கொள்ள வேண்டியது என்ன தெரியுமா? சமுதாயத்தில் நடப்பதை காட்டுவதாக சொல்பவர்கள் தாம் சமுதாயத்தில் அப்படி நடப்பதற்கு காரணமாகவே இருக்கிறார்கள்.

ஒரு குற்றத்திற்கு காரணமாக இருந்துவிட்டு, அப்படி நடக்கிறது என்பதை சமுதாயத்திற்கு உணர்த்துகிறோம் என்று பதில் சொல்வது எந்த ஊரில் அறிவுடமையாக பார்க்கப்படுகிறது? கேவளமான தொழிலுக்கு மரியாதையான பெயரா?

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இரண்டு சாராரை (இன்னும்) நான் கண்டதில்லை. ஒரு சாரார்அவர்களிடம் மாட்டு வால்களைப் போன்ற சாட்டைகள் இருக்கும். அவற்றைக் கொண்டு மக்களை அடித்துக் கொண்டிருப்பர். இன்னொரு சாரார் பெண்கள் ஆவர். இவர்கள் ஆடை அணிந்தும் நிர்வாணமாக இருப்பார்கள். தளுக்கு நடை போட்டு ஆண்களை வளைத்துப் போடுவார்கள். அவர்களின் தலைகள் ஒட்டகத்தின் திமில்களைப் போன்று (கொண்டை போடப்பட்டு) இருக்கும். எவ்வளவோ தொலைவுக்கு சொர்க்கத்தின் நறுமணம் வீசும். ஆனால் இவர்கள் அதன் வாடையைக் கூட நுகர மாட்டார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: முஸ்லிம் 3971

சுவர்க்கத்தின் வாடையைக் கூட நுகராத பெண்களின் பட்டியலில் நாம் சேர வேண்டுமா என்ன?

சகோதரிகளே! ஆடை விஷயமாக இருந்தாலும், தலை முடியை பிண்ணல் போடும் விஷயமாக இருந்தாலும் அனைத்திலும் நாம் பின்பற்ற நினைப்பது தொலைக்காட்சித் தொடர் நாயகிகளை, நாயகர்களைத் தானே?

நமது வழிகாட்டியாக நபி (ஸல்) அவர்கள் இருக்கும் போது இவர்கள் யார் நமக்கு நாகரீகம் கற்றுத்தருவதற்கு?

உலகிலும், மறுமையிலும் நஷ்டத்தை ஏற்படுத்தும் இப்படிப்பட்ட தீய செயல்களைவிட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடி இம்மையிலும் மறுமையிலும் வெற்றி பெருவோமாக!
நன்றி : சகோதரர் ரஸ்மின் M.I.Sc தளம்

  

Read more »

தொ(ல்)லைக் காட்சியின் விபரீதங்கள். ஒரு அலசல்.


ஆக்கம் : ரஸ்மின் M.I.Sc

இன்று சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரினதும் பொழுது போக்கு அம்சமாக எது திகழ்கிறது என்றொரு கேள்வியைக் கேட்டால் டி.வி பார்த்தல் என்ற பதில்தான் அவசரமாக கிடைக்கும்.

புத்தகம் வாசித்தல், குர்ஆன் ஓதுதல், பாடப் புத்தகங்களைப் படித்தல், நல்ல கட்டுரைகளை எழுதுதல், படித்துக் கொடுத்தல், தாய், தந்தைக்கு உதவுதல், தெரிந்தவர்களுக்கு நல்ல செய்திகளைச் சொல்லிக் கொடுத்தல் போன்ற செயல்பாடுகளை பொழுது போக்காக்க் கொண்டவர்கள் மிகச் சிலர் தான் இருக்கிறார்கள்.
வாழ்வில் முன்னேர வேண்டும், வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம் பலரின் மனதில் ஊசலாடுகிறது. ஆனால் அந்த எண்ணத்தை செயல்படுத்தும் முறைதான் அவர்களுக்குத் தெரியவில்லை. இல்லையில்லை தெரிந்து கொள்ள ஆசைப்படவில்லை.
உலக வரலாற்றில் வெற்றிக் கொடி நாட்டிய எத்தனையோ தலைவர்கள் தங்கள் பொழுது போக்காக எதையும் நினைக்கவில்லை வாழ்க்கை வழிமுறையாக அனைத்தையும் நினைத்து அதன் படி தங்களுக்குக் கிடைத்த ஓய்வு நேரத்தைக் கூட வெற்றிப் பாதையின் வழிகாட்டிகளாகப் பயண்படுத்திக் கொண்டார்கள்.
உலகின் வெற்றிப் பாதையில் யாரும் காண முடியாத அளவுக்கு மக்கள் மனதில் இடம் பிடித்து அவர்களுக்கு நேர் வழி காட்டி உலகின் கேடு கெட்ட சமுதாயமாக இருந்தவர்களை மனிதப் புனிதர்களாக மாற்றிய நபி பெருமானார் (ஸல்) அவர்கள், இந்த ஓய்வு நேரம் அதனைப் பயன்படுத்துவதின் முக்கியத்துவம் போன்றவற்றைப் பற்றி மிக அழகான முறையில் ஒரு வரியில் விளக்கிக் கூறுகிறார்கள்.

மனிதர்களில் அதிகமானோர் இரண்டு அருட்செல்வங்களின் விஷயத்தில் (ஏமாற்றப்பட்டு) இழப்புக்குள்ளாகிவிடுகின்றனர்.

1. ஆரோக்கியம்.
2. ஓய்வு நேரம்.
(புகாரி 6412)

ஓய்வு நேரத்தைப் பயண்படுத்துவதின் முக்கியத்துவத்தைப் பற்றி இந்த அளவுக்கு தெளிவாக எந்த மனிதரும் சொல்லியிருக்க முடியாது என்று கூறும் அளவுக்கு மிகத் தெளிவாக விளக்கியிருக்கிறார்கள் நபி (ஸல்) அவர்கள்.
உலகை ஒரு பொழுதைக் கழிக்கும் காட்சியறையாக நினைத்து வாழும் இன்றைய நவீன மனிதர்கள் தங்கள் நேரங்களில் அதிகமானவற்றை வீன் கேளிக்கைகளுக்காகவே செலவு செய்கிறார்கள். அதிலும் அதிகமானவர்கள் தொலைக்காட்சிக்கு முன் உட்கார்ந்து தங்கள் வாழ்க்கையைத் தொலைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
உலகின் வழிகாட்டியான இஸ்லாம் தொலைக்காட்சிப் பெட்டி என்ற இந்த அரிய கண்டு பிடிப்புக்கு மற்ற மார்க்கங்கள் கொடுக்காத ஒரு முக்கிய முன்னுரிமையைக் கொடுக்கிறது. பிரயோஜனமான செய்திகள், கருத்துக்கள், ஆரோக்கியமான தகவல்கள் என்று சிறந்த பல செய்திகள் அதில் ஒளி, ஒலி பரப்பப்படுகிறது. அந்த நிகழ்ச்சிகளை பார்ப்பதை இஸ்லாம் எந்த நேரத்திலும் தடை செய்யவில்லை.
ஆனால் இன்று நாம் நமது சமுதாயத்திற்கும், நமக்கும் எது ஆரோக்கியமான செய்தியோ அதைத் தவிர்த்து விட்டு அதுவல்லாத மற்ற அனைத்து விஷயங்களுக்காகவும் நமது நேரத்தை வீனாக்கிக் கொண்டிருக்கிறோம்.
இப்படி வீனான தொலைக் காட்சித் தொடர்கள், சினிமாக் கூத்தாட்டங்கள் பாடல் காட்சிகள், வக்கிர நடனங்கள், ஆபாசப் பேச்சுக்கள், கபடம் நிறைந்த வார்தைகள் என்பவற்றைப் பார்ப்பதினால் நமது வாழ்வில் நமது எண்ணத்தில், நடை முறையில் பல்வேறான கெட்ட சிந்தனைகள், நடவடிக்கைகள் தோற்றம் பெருவதை இன்றை நவீன உலக ஆராய்ச்சிகள் தினமும் நிரூபிக்கின்றன.
தொலைக் காட்சி பார்ப்பதின் நமக்கு ஏற்படும் உளவியல் பாதிப்புகள்.

தொலைக் காட்சிக் கதையும், தனிமை போன்ற உணர்வும்.

சில தொலைகாட்சி நிகழ்சிகளிலும் ,படங்களிலும் வருகிற கதாபாத்திரங்கள் சில பிரச்சனைகளில் சிக்குண்டு இருப்பது போல காட்டுவார்கள். அத்துடன் வாழ்க்கையில் வெற்றி பெற தவறியவர்கள் சமூகத்தில் இருந்து விலகி தனியாக வாழ்வது போல காட்டுவார்கள்.
படமாக இருந்ததால் 02 மணி நேரத்திற்குள் எல்லா பிரச்சனைகளும் தீர்ந்து விடும். அனால் இதுவே தொடர் நாடகங்களாக இருந்ததால் 02 வருடங்களுக்கு பின்  நாடகம் முடியும் போதே பிரச்சனைகளில் இருந்து விடுபடுவது போல காட்டுவார்கள்.
இவ்வாறான படங்களயும், நாடகங்களையும் தொடர்ச்சியாக சிறுவர்கள் பார்க்கும் போது  நடிக, நடிகைககளை ரோல் மாடல்களாக நினைத்துப் பின்பற்றி இவர்களும் பிரச்சனைகளில் மாட்டுபட்டு தனியாக வாழ்வது போல உணர்ந்து தப்பான முடிவுகளை எடுக்கிறார்கள். காலப்போக்கில் மனிதர்களோடு பழகாமல் உயிர் அற்ற பொருட்களுடன் அல்லது விளையாட்டுப் பொருட்களுன் பேசிப் பேசி காலத்தைக் கழிக்கும் அவல நிலையில் தள்ளப்படுகிறார்கள்.
நம்மை அறியாமல் நமக்குள் தோன்றும் முரட்டுத்தனம்.

தொலைக் காட்சிகளினால் நமக்கு ஏற்படும் பாதிப்புக்களில் மிக முக்கிய இடத்தை பெருவது முரட்டுத் தன்மையாகும். சினிமாப் படங்களில், தொலைக்காட்சிகளில் காட்டப்படும் சண்டைக் காட்சிகள், கொலைகள் போன்றவற்றைப் பார்ப்பதினால் சிறு வயது முதலே குழந்தைகள் மனதில் முரட்டுக் காட்சிகள் கொஞ்சம் கொஞ்சமாக இடம் பிடித்து சினிமாவின் காட்சி நிஜ வாழ்க்கையின் வரையரையாக மாறிவிடுகிறது.
ஒருவர் 20 வயதை அடையும் போது ஏறக்குறைய 200000  சண்டை காட்சிகளையும், 50000 கொலைகளையும்  தொலைகாட்சிகளில் பார்ப்பதற்கான சாத்தியகூறுகளும் சில இடங்களில் காணப்படுகிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன. அண்மையில் குறிப்பாக சிறுவர்களிடம் மேற் கொள்ளப்பட்ட ஆய்வுகளின் போது, 1- 3 மணித்தியாலங்கள்வரை தொலைகாட்சி பார்க்கும், 22 .5 % ஆன சிறுவர்கள் தனது சக தோழர்களுடன், மற்றவர்களுடன் சண்டையில் ஈடுபடுவதாக தெரிவிக்கப்படுகிறது.
05 மணித்தியாலங்களிற்கு மேல் பார்க்கும் போது  இந்த 22.5 % என்பது 28 .8 %க்கு உயர்வடைகிறது. இருந்தாலும் 01 மணித்தியாலத்திற்கும்  குறைவாக தொலைகாட்சி பார்க்கும் 5.7 % ஆன சிறுவர்களும் தப்பான நடவடிக்கைகளில்ஈடுபடுகிறார்கள்.
வீடுகளில் பெற்றோருக்கு மத்தியில் நடக்கும் சண்டைகளும் இதற்கு ஒரு காரணியாகச் சொல்லப் படுவது மேலதிக தகவல்.
செயல்பாடுகளில் சரியான கவணம் செலுத்த முடியாமை.

சிறுவர்களை கவர்வதற்காக சிறுவர் தொலைகாட்சிகளும், சிறுவர் நிகழ்சிகளும் மிகவும் வேகமாக இடம் பிடித்து வருகின்றன. இந்த நிகழ்ச்சிகள் ஒளி, ஒலி பரப்ப்ப்படும் போது  நிறங்கள் அதிகமானதாகவும்,மிகவும் வெளிச்சம் அதிமானதாகவும் காட்டப்படும். காலப்போக்கில் சிறுவர்கள் இந்த தொலைக் காட்சிகளின் ஒளி பரப்பு வேகத்திற்கு இயல்படைந்து விடுகிறார்கள்.
இதனால் வகுப்பறைகளில் ஆசிரியர்கள் பாடங்களை நடத்தும் போது அந்தப் பாடங்களை விரைவாக நடத்தி முடிக்க வேண்டும் என்ற குறுகிய எண்ணமும்,சுறுங்கிய கவனமும் மாணவர்கள் மத்தியில் குடிகொள்ள ஆரம்பிக்கிறது.
சிறுவர்கள் அதிக நேரம் பாடங்களில் கவனம் செலுத்த முடியாமல் திணறுகிறார்கள்.
டி.வி. பார்த்தல் கேம்கள் விளையாடுதல் போன்றவை பற்றிய ஆராய்சியில் ஒரு நாளைக்கு 02 மணி நேரங்கள்  சிறுவர்களுக்கு TV பார்க்கவும், கேம்ஸ்களை விளையாடவும் கொடுத்து பரிசீலனை செய்த போது சிறிது நாட்களின் பின்னர் குறிப்பிட்ட சிறார்கள் பாடங்களில் கவணம் செலுத்த சிறமப்பட்டமை கண்டறியப்பட்டுள்ளது.
கனவில் கூட இன்பம் இல்லை.

50 பேரை ஆராய்ச்சிக்கு உட்படுத்தி   ,தாம் காணும் கனவுகளை பற்றிய செய்திகளை குறித்து வைக்க கூறி உள்ளார்கள். (இவர்களில் பாதிபேர் 25வயதுக்கு உட்பட்டவர்கள், பாதிபேர் 55 வயதுக்கு மேற்பட்டவர்கள்) இறுதியில் தாம் கண்ட கணவுகள் தொடர்பாக அவர்கள் தெரிவித்த பதில் ஆச்சரியத்தை ஊட்டியது.
இறுதி முடிவை பார்த்த போது 25 வயதுக்கு உட்பட்டவர்களில் அநேகமானோர்  கண்டகனவுகள் பல  வண்ண நிறங்களாக  தோன்றி உள்ளது. 55 வயதுக்கு மேற்பட்டவர்களில்அநேகமானோர்  கண்ட கனவுகள் கருப்பு வெள்ளையில் தெரிந்துள்ளது. 55 வயதுக்கு மேற் பட்டவர்கள் அந்த காலத்தில் கருப்பு வெள்ளை தொலைகாட்சியை பார்த்தமையேஇதற்கு காரணம் என கூறப்படுகிறது.
அறியாத வயதும் தெரியாமல் செய்யும் தவறும்.

தங்கள் குழந்தைகள் கொஞ்சம் எழுந்து நடக்க ஆரம்பித்தவுடன் அவர்களின் சேட்டைகள், குறும்புத் தனங்களும் கூடவே சேர்ந்து ஆட்டம் காட்ட ஆரம்பிக்கும். தாய் வேலை பார்க்க வேண்டும் என்பதற்காக அல்லது நிம்மதியாகத் தூங்க வேண்டும் என்பதற்காக தனது குழந்தைக்கு தொலைக் காட்டியை போட்டுக் காட்சிப்படுத்துகிறாள்.
பொம்மைப் படங்கள், சிறுவர் நடணங்கள், பேய்களின் (?) பெயரால் உருவாக்கப்படும் கதைகள் என்று தொடங்கி கட்டியணைத்து குத்தாட்டம் போடும் சினிமாப் பாடல்கள் வரை அந்தக் குழந்தைக் குறைவின்றி பார்த்து ரசிக்கும் நிலையை தாயே தாரைவார்த்துக் கொடுக்கிறாள்.
இதனால் தனது குழந்தையின் வாழ்வில் எதிர்காலத்தில் என்ன மாற்றம் நிகழப் போகிறது? என்ன விபரீத்த்தைக் குழந்தை அடைந்து கொள்ளப் போகிறது என்பதை தாய் சிந்திக்க மறுக்கிறாள்.
குழந்தை அறியாத வயதில் தெரியமால் செய்யும் தவறுக்கு துணை நிற்கும் தாயின் செயல்பாட்டால் பிள்ளையின் கவணம் திசை திருப்பப் பட்டு ஒரு குறுகிய வட்டத்திற்குள் பிள்ளையின் சிந்தனை கொண்டு வந்து நிறுத்தப் படுகிறது.
பிறந்து 29 மாதங்களே ஆன குழந்தைகளிடம் நடந்த ஆராய்ச்சியின் போது,அதிகம் TV பார்த்த குழந்தைகள் எதிர் காலத்தில் பாடங்களில் குறைவான மதிப்பெண்களை பெற்றுக் கொள்வதுடன்,  வகுப்பறைகளில்  சுறுசுறுப்பு அற்றுப் போய் சோம்பேரித் தனத்துடன் காணப்படுகிறார்கள்.
பிரான்ஸ் நாட்டில் 3 வயதுக்கு குறைவான குழந்தைகளை மையப்படுத்தி எடுக்கும் நிகழ்ச்சிகள் அனைத்துக்கும் தடை விதிக்கப் பட்டுள்ளது என்பது மேலதிக தகவல்.
தொலைக் காட்சி ரசனையும், உடல் பருமனும்.

எந்த வேலைகளிலும் ஈடுபடாமல் தொடர்நது தொலைக் காட்சி பார்த்துக் கொண்டும், சாப்பிட்டுக் கொண்டும் இருப்பவர்களுக்கு உடலில பெருகும் கலோரிகள் நிலை பெற்று உடல் பருமன் அசுர வேகத்தில் பெருக ஆரம்பிப்பதாகவும் ஆராய்ச்சிகள் கூறுகின்றன.
நடத்தப்பட்ட ஆராச்சியில் தொலைக் காட்சியை குறைவாக பார்த்தவர்கள் தினம் 5 மணி நேரங்கள் வரை பார்த்தவர்களை விட 120 கலோரிகளை தங்கள் உடம்பில் இருந்து இல்லாமலாக்குகிறார்கள்.
தினமும் 5 மணி நேரங்கள் தொலைக் காட்சியைப் பார்ப்பவர்கள் ஒரு நாளைக்கு 120 கலோரிகள் கொழுப்பை தங்கள் உடம்பில் அதிகப்படுத்திக் கொள்கிறார்கள்.
அன்பின் சகோதரர்களே ! தாய் மார்களே ! பெற்றோர்களே !
சினிமாவின் சீர் கேட்டைத் தவிர்ப்போம். தொல்லைக் காட்சியான தொலைக் காட்டியை நல்லதுக்கு மாத்திரம் பயண்படுத்துவோம். என்ற கோரிக்கையை அன்பாக உங்களிடம் முன்வைக்கிறோம்.

Read more »

ஆறு நோன்பு ஆதாரமற்றதா?


حَدَّثَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ وَقُتَيْبَةُ بْنُ سَعِيدٍ وَعَلِيُّ بْنُ حُجْرٍ جَمِيعًا عَنْ إِسْمَعِيلَ قَالَ ابْنُ أَيُّوبَ حَدَّثَنَا إِسْمَعِيلُ بْنُ جَعْفَرٍ أَخْبَرَنِي سَعْدُ بْنُ سَعِيدِ بْنِ قَيْسٍ عَنْ عُمَرَ بْنِ ثَابِتِ بْنِ الْحَارِثِ الْخَزْرَجِيِّ عَنْ أَبِي أَيُّوبَ الْأَنْصَارِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّهُ حَدَّثَهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَنْ صَامَ رَمَضَانَ ثُمَّ أَتْبَعَهُ سِتًّا مِنْ شَوَّالٍ كَانَ كَصِيَامِ الدَّهْرِ و حَدَّثَنَا ابْنُ نُمَيْرٍ حَدَّثَنَا أَبِي حَدَّثَنَا سَعْدُ بْنُ سَعِيدٍ أَخُو يَحْيَى بْنِ سَعِيدٍ أَخْبَرَنَا عُمَرُ بْنُ ثَابِتٍ أَخْبَرَنَا أَبُو أَيُّوبَ الْأَنْصَارِيُّ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ بِمِثْلِهِ و حَدَّثَنَاه أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْمُبَارَكِ عَنْ سَعْدِ بْنِ سَعِيدٍ قَالَ سَمِعْتُ عُمَرَ بْنَ ثَابِتٍ قَالَ سَمِعْتُ أَبَا أَيُّوبَ رَضِيَ اللَّهُ عَنْهُ يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِمِثْلِهِ

யார் ரமளானில் நோன்பு நோற்று பின்னர் அதைத் தொடர்ந்து ஷவ்வால் மாதத்தில் ஆறு நோன்பு நோற்கிறாரோ அவர் காலமெல்லாம் நோன்பு நோற்றவரைப் போன்றவராவார் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ அய்யூப் அல்அன்ஸாரி (ரலி)
நூற்கள்: முஸ்லிம், திர்மிதீ, அபூதாவூத், இப்னுமாஜா, அஹ்மத்,
பைஹகீயின் சுனன் ஸகீர், தப்ரானியின் முஃஜம் ஸகீர், தாரிமி
இன்னும் பல நூல்களிலும் மேற்கண்ட ஹதீஸ் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த ஹதீஸின் அடிப்படையில் ஷவ்வால் மாதத்தில் ஆறு நோன்பு நோற்கும் வழக்கம் முஸ்லிம்களிடம் நிலை பெற்றுள்ளது. குறிப்பாக தவ்ஹீத் பிரச்சாரம் தமிழகத்தில் தீவிரமடைந்த பின்னர் ஷவ்வால் மாதம் ஆறு நோன்பு நோற்கும் வழக்கம் அதிகரித்துள்ளது.
ஆயினும் ஆறு நோன்பு பற்றிய ஹதீஸ் பலவீனமானது என்று சில அறிஞர்கள் மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்வதால் இந்த ஹதீஸ் பற்றியும் நாம் மறு ஆய்வு செய்யும் அவசியம் ஏற்பட்டது.
மேற்கண்ட ஹதீஸை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக அபூ அய்யூப் அல் அன்ஸாரி (ரலி) அறிவிக்கிறார்கள்.
அபூஅய்யூப் அல்அன்ஸாரி (ரலி) வழியாக உமர் பின் ஸாபித் பின் ஹாரிஸ் என்பவர் அறிவிக்கிறார்.
உமர் பின் ஸாபித் பின் ஹாரிஸ் என்பவர் கூறியதாக ஸஅத் பின் ஸயீத் பின் கைஸ் என்பார் அறிவிக்கின்றார்.
ஸஅத் பின் ஸயீத் பின் கைஸ் என்ற இந்த அறிவிப்பாளர் காரணமாகவே மேற்கண்ட ஹதீஸ் பலவீனமானது என்று மாற்றுக் கருத்துடையோர் விமர்சனம் செய்கின்றனர்.
இவர் பலவீனமானவர் என்று அஹ்மத் பின் ஹம்பல், இப்னு மயீன் ஆகியோர் கூறுகிறார்கள். இவர் பலமானவர் அல்ல என்று நஸயீ கூறுகிறார். இவரது நினைவாற்றல் குறித்து அறிஞர்கள் குறை கூறியுள்ளதாக திர்மிதீ கூறுகிறார். இவரை ஆதாரமாக எடுப்பது கூடாது என்று இப்னு ஹிப்பான் கூறுகிறார்.
இப்னு அதீ, அஜலீ, இப்னு ஸஅத் ஆகியோர் இவரை நம்பகமானவர் என்று கூறியுள்ளனர்.
பொதுவாக ஒரு அறிவிப்பாளர் பற்றி முரண்பட்ட இரண்டு அபிப்பிராயங்கள் கூறப்பட்டால் குறை பற்றிய விமர்சனமே முன்னுரிமை அளிக்கப்படும். இந்த அடிப்படையில் மேற்கண்ட ஹதீஸ் முஸ்லிமில் இடம் பெற்றிருந்தாலும் இது பலவீனமான அறிவிப்பு என்பதில் ஐயமில்லை.
ஆயினும் ஷவ்வால் மாதத்தில் ஆறு நோன்பு நோற்பது பற்றிய நம்பகமான வேறு அறிவிப்புகளும் உள்ளன.
அவற்றையும் கவனத்தில் கொண்டால் ஆறு நோன்பு நோற்பதற்கு அடிப்படை ஆதாரம் உள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம்.
மேற்கண்ட ஹதீஸ் அபூதாவூதின் மற்றொரு அறிவிப்பில், வேறொரு அறிவிப்பாளரால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
حَدَّثَنَا النُّفَيْلِيُّ حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُحَمَّدٍ عَنْ صَفْوَانَ بْنِ سُلَيْمٍ وَسَعْدِ بْنِ سَعِيدٍ عَنْ عُمَرَ بْنِ ثَابِتٍ الْأَنْصَارِيِّ عَنْ أَبِي أَيُّوبَ صَاحِبِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَنْ صَامَ رَمَضَانَ ثُمَّ أَتْبَعَهُ بِسِتٍّ مِنْ شَوَّالٍ فَكَأَنَّمَا صَامَ الدَّهْرَ
அபூதாவூத் 2078, நஸயீ, இப்னு ஹிப்பான் ஆகிய நூற்களில் இடம் பெற்று இந்த அறிவிப்பில்,
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஅய்யூப் அல்அன்ஸாரி (ரலி) அறிவிக்கிறார்.
அபூஅய்யூப் அல்அன்ஸாரி கூறியதாக உமர் பின் ஸாபித் அறிவிக்கிறார்.
உமர் பின் ஸாபித் கூறியதாக ஸஅத் பின் ஸயீத் என்பாரும், ஸஃப்வான் பின் ஸுலைம் என்பவரும் அறிவிக்கிறார்கள் என்று மேற்கண்ட ஹதீஸில் கூறப்பட்டுள்ளது.
அதாவது உமர் பின் ஸாபித் என்பாரிடமிருந்து மேற்கண்ட ஹதீஸை ஸஅத் பின் ஸயீத் மட்டும் செவியுறவில்லை. அவருடன் ஸஃப்வான் என்பாரும் செவியுற்று அறிவிக்கிறார். ஸஅத் என்பாரின் நினைவாற்றல் குறைவு என்றாலும், அவருடன் இணைந்து ஸஃப்வான் அறிவிப்பதால் இந்தக் குறை நீங்கி விடுகின்றது.
ஸஃப்வான் பின் ஸுலைம் என்பார் நம்பகமானவர் என்று அஹ்மத் பின் ஹம்பல், அலீ பின் மதீனீ, முஹம்மத் பின் ஸஅத், அஜலீ, அபூஹாத்தம் ராஸீ, நஸயீ மற்றும் பலர் கூறியுள்ளனர்.
உமர் பின் ஸாபிதும், அவரிடமிருந்து அறிவிக்கும் ஸஃப்வான் ஆகிய இருவரும் நம்பகமானவர்கள் என்றாலும் ஸஃப்வானிடமிருந்து நூலாசிரியர் அபூதாவூத் வரையுள்ள மற்ற அறிவிப்பாளர்கள் நம்பகமானவர்கள் தாமா? என்ற சந்தேகம் இந்த இடத்தில் தோன்றலாம்.
ஸஃப்வான் கூறியதாக அறிவிப்பவர் அப்துல் அஸீஸ் பின் முஹம்மத் ஆவார்.
இவர் நம்பகமானவர்; ஆதாரமாகக் கொள்ளத் தக்கவர் என்று இப்னு மயீன் கூறுகிறார். இவரிடம் குறை இல்லை என்று நஸயீ கூறுகிறார். மாலிக் இமாம், அஜலீ ஆகியோரும் இவரை நம்பகமானவர் என்று கூறியுள்ளனர்.
இவர் நம்பகமானவர்; சில நேரம் தவறு செய்து விடுவார் என்று இப்னு ஹிப்பான், இப்னு ஸஅத் ஆகியோர் கூறுகிறார்கள். (நம்பகமான பெரும்பாலான அறிவிப்பாளர் பற்றி, சில நேரம் தவறு செய்து விடுவார் என்று கூறப்படுவதுண்டு)
அப்துல் அஸீஸிடமிருந்து இதை அறிவிப்பவர் நுபைலீ என்பார். இவரது இயற்பெயர் அப்துல்லாஹ் பின் முஹம்மத் பின் அலீ. இவர் நம்பகமானவர் என்று நஸயீ கூறுகிறார். இவரை விட நினைவாற்றல் மிக்கவரை நான் கண்டதில்லை என்று அபூதாவூத் கூறுகிறார். இவர் நம்பகமான உறுதியான அறிவிப்பாளர் என்று அபூஹாத்தம் ராஸீ கூறுகிறார். தாரகுத்னீ, இப்னு ஹிப்பான், இப்னு கானிவு ஆகியோர் இவரை நம்பகமானவர் எனக் கூறியுள்ளனர்.
இவரிடமிருந்து அபூதாவூத் இமாம் கேட்டு, தமது நூலில் இதைப் பதிவு செய்துள்ளனர். எனவே முஸ்லிம் நூலில் உள்ள அறிவிப்பில் குறை இருந்தாலும் அபூதாவூதில் இடம் பெற்ற அறிவிப்பு ஆதாரமாகக் கொள்ளத்தக்க தகுதியில் அமைந்துள்ளது.
மேலும் ஷவ்வால் ஆறு நோன்பு பற்றி ஆதாரப்பூர்வமான வேறு செய்திகளும் உள்ளன.
حَدَّثَنَا يَحْيَى بْنُ حَسَّانَ حَدَّثَنَا يَحْيَى بْنُ حَمْزَةَ حَدَّثَنَا يَحْيَى بْنُ الْحَارِثِ الذِّمَارِيُّ عَنْ أَبِي أَسْمَاءَ الرَّحَبِيِّ عَنْ ثَوْبَانَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ صِيَامُ شَهْرٍ بِعَشَرَةِ أَشْهُرٍ وَسِتَّةِ أَيَّامٍ بَعْدَهُنَّ بِشَهْرَيْنِ فَذَلِكَ تَمَامُ سَنَةٍ يَعْنِي شَهْرَ رَمَضَانَ وَسِتَّةَ أَيَّامٍ بَعْدَهُ
ஒரு மாத நோன்பு பத்து மாத நோன்புக்குச் சமமானது; அதன் பின்னர் ஆறு நோன்பு இரண்டு மாதங்களுக்குச் சமமானது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஸஃப்வான் (ரலி)
நூல்: தாரிமி 1690
ஸஃப்வான் வழியாக இதை அம்ர் பின் மிர்ஸத் என்பார் அறிவிக்கிறார். இவர் நம்பகமான அறிவிப்பாளர்.
அம்ர் பின் மிர்ஸத் வழியாக இதை யஹ்யா பின் ஹாரிஸ் என்பார் அறிவிக்கிறார். இவரும் நம்பகமான அறிவிப்பாளர்.
யஹ்யா பின் ஹாரிஸ் வழியாக யஹ்யா பின் ஹம்ஸா என்பார் அறிவிக்கிறார். இவரும் நம்பகமான அறிவிப்பாளர்.
யஹ்யா பின் ஹம்ஸா வழியாக யஹ்யா பின் ஹஸ்ஸான் என்பார் அறிவிக்கிறார். இவரும் நம்பகமான அறிவிப்பாளர்.
இதே ஹதீஸ் இப்னுமாஜா 1705, அஹ்மத் 21378 ஆகிய நூற்களிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பெருநாள் முடிந்து மறு நாளே நோன்பை ஆரம்பித்து இடைவெளி இல்லாமல் தொடர்ந்து இதை நோற்க வேண்டுமா? அல்லது இம்மாதத்தில் ஏதேனும் ஆறு நாட்களில் விட்டு விட்டு நோற்கலாமா? என்ற கேள்விக்கு இந்த அறிவிப்பில் விடை உள்ளது.
அதாவது எல்லா நன்மைகளும் ஒன்றுக்குப் பத்து என்ற அளவில் கணக்கிடப்படுகின்றன. ரமளானில் நோற்ற 30 நோன்புகளும் பத்து மாதத்திற்குச் சமமாகி விடுகின்றது. ஆறு நோன்பு அறுபது நோன்புக்குச் சமமாகி விடுகின்றது.
இதனால் வருடம் முழுவதும் நோன்பு நோற்ற நன்மை கிடைக்கிறது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விளக்கியுள்ளார்கள்.
ஒன்றுக்குப் பத்து என்ற நன்மையை அடைவது தான் இதன் நோக்கம் எனும் போது ஷவ்வாலில் எந்த ஆறு நாட்களில் நோற்றாலும் இந்த நன்மை கிடைத்து விடும்.
மேலும் பெரு நாளைக்கு மறு நாள் முதல் தொடர்ந்து ஆறு நாட்கள் பிடிக்க வேண்டும் எனும் போது இந்த நாட்களில் மாதவிடாய் ஏற்பட்ட பெண்கள் அந்த நன்மையை இழக்க வேண்டிய நிலைமை ஏற்படுகிறது என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

                                                                                                                        பி. ஜைனுல் ஆபிதீன்

Read more »