Thursday, October 27, 2011

துல் ஹஜ் ஒன்பதாம் நாள் (அரஃபா) நோன்பு.




“அல்லாஹ்விடத்தில் துல்ஹஜ் பத்து நாட்களில் நற்காரியங்களை செய்வதற்கு மிகவும் விருப்பமான இந்த நாட்களைவிட வேறெந்த நாட்களும் இல்லை” என்று நபி (ஸல்) அவர்கள் கூற, அதற்கு நபித்தோழர்கள், “அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்விற்காக போரிடுவதைவிடவா?” என்று வினவ, “ஆம். அல்லாஹ்வின் பாதையில் போரிடுவதைவிடவும் தான்; என்றாலும் ஒரு வீரன் தன்னுடைய உயிர், உடமைகளோடு சென்று அதில் ஒன்றைக் கொண்டும் அவன் திரும்பவில்லை எனில் அது மிகவும் சிறந்த செயலே” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி),        நூல்: புகாரி.


அரஃபா நாளில் நோன்பு நோற்பது பற்றி நபி (ஸல்) அவர்களிடம் வினவப்பட்டது. அதற்கு அவர்கள் “அது கடந்த வருடத்தின் மற்றும் வரக்கூடிய வருடத்தின் பாவத்தை போக்கிவிடும்!” என்று பதிலளித்தார்கள். அறிவிப்பவர்: அபூகதாதா(ரலி), நூல்: முஸ்லிம், திர்மிதி, அபூதாவூத்.


நாளைத் தீர்மானிப்பது எப்படி?
சவூதி அரசாங்கம் எப்போது தலைப் பிறை என்று அறிவிக்கிறதோ அது தான் உலகத்துக்கே தலைப் பிறை என்ற கருத்துடையோர் அரஃபா நோன்பை ஆதாரமாகக் காட்டுகிறார்கள். ஹஜ்ஜுப் பெருநாளைக்கு முந்திய நாள் அரஃபா நாளாகும். இந்த நாளில் அரஃபா என்ற மைதானத்தில் ஹாஜிகள் கூடுவார்கள். சுபுஹ் தொழுத பின் முஜ்தலிபாவிலிருந்து புறப்பட்டு அரபாவுக்கு வருவார்கள். அரபாவில் அன்றைய மஃரிப் வரை தங்கிவிட்டு மஃரிப் தொழாமல் புறப்பட்டு விடுவார்கள். இந்த நாளில் ஹாஜிகள் நோன்பு நோற்கக் கூடாது.  ஹஜ்ஜுக்குச் செல்லாமல் ஊரில் இருப்போர் இந்நாளில் நோன்பு நோற்பது சுன்னத்தாகும். இதில் எந்தக் கருத்து வேறுபாடும் கிடையாது. 
 தலைப் பிறையைத் தீர்மானிக்க மிகத் தெளிவான வாசகங்களைக் கொண்ட பல ஹதீஸ்களை நாம் இது வரை வெளியிட்டுள்ளோம். அவற்றுக்குரிய முக்கியத்துவத்துடன் அவற்றை அணுகாமல் அரஃபா நோன்பிலிருந்து தலைப் பிறையைத் தீர்மானிக்கும் வழிமுறையைச் சிலர் புதிதாகக் கண்டு பிடித்துள்ளார்கள். சவூதியின் பிறைக் கணக்குப்படி 9ம் நாளில் ஹாஜிகள் அரஃபாவில் கூடுகின்றார்கள். அவர்கள் கூடியிருக்கின்ற காட்சியை நாம் தொலைக் காட்சியில் பார்க்கிறோம். அந்த நேரத்தில் நமது நாட்டில் பிற 9ஆகவில்லை என்பதால் நோன்பு நோற்காமல் இருந்து விட்டு ஹாஜிகள் அரஃபாவிலிருந்து சென்ற பின்னர் நாம் நோன்பு வைக்கிறோம். இது எப்படி அரஃபா நோன்பாகும்? 

எனவே சவூதியில் என்றைக்கு அரஃபா நாள் என்று முடிவு செய்கிறார்களோ அது தான் முழு உலகுக்கும் அரஃபா நாள் சவூதியில் என்றைக்கு ஹஜ் பெருநாள் கொண்டாடுகிறார்களோ அன்று தான் முழு உலகுக்கும் ஹஜ் பெருநாள் என்பது இவர்களின் வாதம். நோன்பையும், நோன்புப் பெருநாளையும் கூட சவூதியை அடிப்படையாகக் கொண்டே முடிவு செய்ய வேண்டும் எனக் கூறுகின்றனர். 

அரஃபா நாள் நோன்பு என்பது ஹாஜிகளுக்கு இல்லை என்பதை முன்னர் குறிப்பிட்டுள்ளோம். ஹாஜிகள்  அல்லாதவர்களுக்குத் தான் அரஃபா நோன்பு சுன்னத், இவர்களின் கருத்துப்படி உலகில் பல பகுதி மக்களுக்கு அரஃபா நோன்பு என்ற பாக்கியம் கிடைக்காமல் போய் விடுகிறது. எப்படி என்று பார்ப்போம்.  ஹாஜிகள் சுப்ஹுக்குப் பிறகிலிருந்து மக்ரிபுக்கு முன்னர் வரை கூடியிருப்பார்கள். மக்ரிபுக்குப் பிறகு அங்கிருந்து புறப்பட்டுச் சென்று விடுவார்கள். இது தான் ஹாஜிகளின் அரஃபா நாள்.அமெரிக்காவைப் பொறுத்த வரை ஹாஜிகள் அரஃபாவில் கூடும் நேரத்தில் மக்ரிபை அடைந்திருப்பார்கள். ஹாஜிகள் அரஃபாவை விட்டு வெளியேறும் போது அமெரிக்காவில் சுபுஹு நேரத்தை அடைவார்கள். அரஃபாவில் கூடியிருக்கும் நேரத்தில் நோன்பிருக்க வேண்டும் என்று பொருள் செய்தால் அமெரிக்காவில் இரவு நேரத்தில் தான் நோன்பு நோற்க வேண்டும். 

அல்லாஹ் கூறுவது போல் சுபுஹ் நேரத்திலிருந்து மக்ரிப் வரை நோன்பிருக்க வேண்டுமா? அல்லது இவர்கள் கூறுவது போல் மக்ரிபிலிருந்து சுபுஹ் வரை நோன்பிருக்க வேண்டுமா? 

இஸ்லாம் உலகளாவிய மார்க்கம். அனைவருக்கும் பொதுவான மார்க்கம். இந்த அடிப்படையில் அமெரிக்க முஸ்லிம்களுக்கு நாம் ஒரு வழி சொல்லியாக வேண்டும்.
அதாவது அரஃபாவில் சுபுஹுக்குப் பின் ஹாஜிகள் தங்குகிறார்கள். அந்த நேரம் அமெரிக்காவில் மஃரிப் நேரமாகும். மஃரிப் நேரத்தில் நோன்பு வைக்க முடியாது. அதற்குப் பின் வருகின்ற சுபுஹ் நேரத்திலிருந்து நோன்பை அவர்கள் பிடிக்க வேண்டும் என்று தான் கூறியாக வேண்டும். அவ்வாறு கூறினால் அமெரிக்க மக்கள் சுபுஹை அடைந்து நோன்பு பிடிக்கும் போது ஹாஜிகள் அரஃபா நாளை முடித்து பெருநாள் இரவை அடைந்திருப்பார்கள். அமெரிக்க முஸ்லிம்களைப் பொறுத்த வரை சவூதியில் பெருநாள் இரவை அடையும் போது தான் அரபா நோன்பு நோற்க வேண்டும் என்ற நிலை ஏற்படுகிறது. 

பெருநாள் தினத்தில் ஹராமான நாளில் நோன்பு நோற்கச் சொல்லப் போகிறார்களா? அல்லது அமெரிக்க முஸ்லிம்களுக்கு மட்டும் அரஃபா நோன்பு கிடையாது என்று கூறப் போகிறார்களா? 
ஹாஜிகள் அரஃபாவில் தங்கும் போது தான் நோன்பு பிடிக்க வேண்டும் என்று தவறான பொருள் கொண்டதால் தான் இந்த விபரீதம் ஏற்படுகிறது. 
அமெரிக்க முஸ்லிம்கள் சுப்ஹு நேரத்திலிருந்து மக்ரிப் நேரம் வரும் வரை நோன்பிருந்தால் ஒன்று ஹாஜிகள் அரஃபாவில் கூடுவதற்கு முன்னால் நோன்பு வைக்க வேண்டும் அல்லது ஹாஜிகள் அரஃபாவை விட்டு வெளியேறி (யவ்முந் நஹ்ர்) பெருநாளை அடைந்த பின்னால் நோன்பு நோற்க வேண்டும். எப்படிப் பார்த்தாலும் அரஃபாவில் ஹாஜிகள் கூடியிருக்கும் நேரத்தில் நோன்பு வைக்க வேண்டும் என்பது உலகத்தின் ஒரு பகுதி மக்களுக்குச் சாத்தியமில்லாததாக உள்ளது..
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் போதனை உலக மக்கள் அனைவருக்கும் பொருந்தக் கூடியது. உலகின் ஒரு பகுதி மக்களுக்கு அது பொருந்தவில்லை என்றால் அந்தப் போதனையில் தவறு இருக்காது. நாம் விளங்கிக் கொண்டது தவறு என்ற முடிவுக்குத் தான் வர வேண்டும். 
யார் அம்மாதத்தை அடைகிறாரோ என்ற இறை வசனத்திலிருந்தும் விஞ்ஞான அடிப்படையிலும் உலகில் அனைவரும் ஒரே நேரத்தில் மாதத்தை அடைவதில்லை என்பதை ஏற்கனவே தெரிந்து கொண்டோம். 
மாதத்தை அடைவதில் வித்தியாசம் இருக்கிறது என்றால் 9வது பிறையை அடைவதிலும் வித்தியாசம் இருக்கத் தான் செய்யும். எனவே அரஃபா நோன்பை எப்படிப் புரிந்து கொள்ள வேண்டும் என்றால் மக்காவில் என்றைக்கு துல்ஹஜ் பிறை 9ஆக இருக்குமோ அன்று மக்காவில் அரஃபா நாள். நமக்கு துல்ஹஜ் பிறை 9 அன்று நமக்கு அரஃபா நாள். இது தான் அந்த ஹதீஸின் பொருள். எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் அதை நாம் இருக்கின்ற நவீன உலகத்தில் இருந்து மட்டுமே பார்க்கக் கூடாது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடைய காலத்தில் அவர்கள் எப்படி நடைமுறைப்படுத்தினார்கள் என்பதையும் பார்க்க வேண்டும். 
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனாவில் இருந்த போது ஹாஜிகள் அரஃபாவில் கூடியுள்ளார்கள். அரஃபாவில்  ஹாஜிகள் கூடிய செய்தியை தொலைபேசியில் கேட்டோ அல்லது தொலைக்காட்சியில் பார்த்தோ  நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நோன்பு வைக்கவில்லை.  தங்களுடைய பகுதியில் பார்க்கப்பட்ட பிறையின் அடிப்படையில்  தான் அரஃபா நாள் நோன்பைத் தீர்மானித்தார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நினைத்திருந்தால் மக்காவில் ஹாஜிகள் கூடும் நாளை அறிந்து அந்த நாளிலேயே நோன்பு வைக்க முயற்சி செய்திருக்கலாம். ஏனென்றால் தலைப் பிறை பார்த்த நாளிலிருந்து எட்டு நாட்கள் கழித்துத் தான் அரஃபா நாள் வருகின்றது. இந்த எட்டு நாட்கள் இடைவெளியில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் யாரையேனும் அனுப்பி அரஃபா நாளை விசாரித்து வரச் சொன்னதாக எந்த ஒரு ஆதாரத்தையும் காட்ட முடியாது. மக்காவிலும், மதீனாவிலும் ஒரே நாளில் பிறை தென்பட்டிருக்கும் என்று சிலர் கூற முற்படலாம். ஒரே நாளில் தென்படுவதற்கு வாய்ப்பிருந்தது போல் தென்படாமல் இருப்பதற்கும் வாய்ப்பு இருந்தது என்பது தான் இதற்கான நமது பதில்.

தொலைத் தொடர்பு
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களது காலத்தில் இப்போது இருப்பது போன்று தொலைத் தொடர்பு வசதிகள் இருந்திருந்தால் அவர்கள் அதைப் பயன்படுத்தியிருப்பார்கள் என்று யூகத்தின் அடிப்படையில் சிலர் இட்டுக்கட்டிக் கூறுகின்றார்கள்.நாம் கேட்பது இருக்கின்ற வசதியை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பயன்படுத்தினார்களா என்பது தான்.தொலைபேசி இருந்தால் கேட்டுத் தெரிந்திருப்பார்களாம். முதல் பிறைக்கும், அரஃôபவிற்கும் எட்டு நாள் வித்தியாசம் உள்ளது. இந்த எட்டு நாள் அவகாசத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆளனுப்பி விசாரித்தார்களா?எந்த ஆத்மாவையும் அதன் சக்திக்கு அதிகமாக அல்லாஹ் சிரமப்படுத்துவதில்லை (2.286)  இந்த மார்க்கத்தில அவன் உங்களுக்கு எந்தச் சிரமத்தையும் ஏற்படுத்தவில்லை. (2.278) என்ற வசனங்களை எடுத்துக் காட்டி அதனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆளனுப்பவில்லை என்:று சிலர் கூறுகின்றனர்.. மக்காவுக்கு ஆளனுப்புவது சக்திக்கு அதிகமான சிரமமான காரியமா?ஒட்டகப் பயணம் சர்வ சாதாரணமாக இருந்த காலத்தில் மக்காவிற்கு ஆள் அனுப்பி விசாரிப்பது அப்படி ஒன்றும் சிரமமான காரியமல்ல. அதிகப்பட்சமாக நான்கு நாட்களில் மதீனாவில் இருந்து மக்காவிற்குப் போய் விட்டு வர முடியும்.நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உளவு பார்ப்பதற்காக உஸ்மான் (ரலி) அவர்களை மக்காவிற்கு அனுப்பி வைத்தார்கள் என்ற செய்தி ஹதீஸ்களில் காணப்படுகிறது. சக்திக்கு மீறிய காரியத்தைத் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செய்தார்களா?உண்மையிலேயே மக்காவில் என்றைக்கு ஹாஜிகள் கூடுகிறார்களோ அன்றைக்குத் தான் அரஃபா நாள் என்று இருந்திருக்குமானால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அதை அறிவதற்கு ஆர்வம் காட்டாமல் இருந்திருக்க மாட்டார்கள். நன்மைகளைப் பெறுவதில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் யாருக்கும் சளைத்தவர்களல்ல.அரஃபா நாளை நபித்தோழர்கள் எப்படிப் புரிந்து கொண்டார்கள் என்பதற்கு ஆதாரமாக கீழ்க்கண்ட செய்தி அமைந்துள்ளது. 

)وأخبرنا) أبو عبد الله الحافظ ثنا أبو محمد عبد الله بن جعفر بن درستويه النحوي ببغداد ثنا محمد بن الحسين بن أبي الحنين ثنا عارم أبو النعمان ثنا حماد بن زيد قال سمعت ابا حنيفة يحدث عمرو بن دينار قال حدثني علي بن الاقمر عن مسروق قال دخلت على عائشة يوم عرفة فقالت اسقوا مسروقا سويقا وأكثروا حلواه قال فقلت اني لم يمنعني ان اصوم اليوم إلا اني خفت ان يكون يوم النحر فقالت عائشة النحر يوم ينحر الناس والفطر يوم يفطر الناس - السنن الكبرى للبيهقي - (ج 4 / ص 252 
நான் அரஃபா நாளில் ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்றேன். இவருக்குக் கோதுமைக் கஞ்சியைக் கொடுங்கள். அதில் இனிப்பை அதிகமாக்குங்கள் என்று ஆயிஷா (ரலி) கூறினார்கள். (அரஃபா நாளாகிய) இன்று நான் நோன்பு பிடிக்காததன் காரணம் இன்று (மக்காவில்) ஹஜ்ஜுப் பெருநாள் தினமாக இருக்கலாம் என்று நான் அஞ்சுவதே என்று நான் கூறினேன். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள் ஹஜ்ஜுப் பெருநாள் என்று மக்கள் முடிவு செய்யும் நாளே ஹஜ்ஜுப் பெருநாள். நோன்புப் பெருநாள் என்று மக்கள் முடிவு செய்யும் நாளே நோன்புப் பெருநாள் என்று விளக்கமளித்தார்கள்.
           அறிவிப்பவர் :  மஸ்ரூக்             நூல் :  பைஹகீ 
 மக்காவில் என்றைக்கு அரஃபா நாள் என அறிந்து கொண்டு மதீனாவிலுள்ள மக்கள் நோன்பிருக்கவில்லை. தாங்களாகவே பிறை பார்த்துத் தான் தீர்மானித்திருந்தார்கள் என்பதையும் அரஃபா நாளை நபித்தோழர்கள் எப்படிப் புரிந்து வைத்திருந்தார்கள் என்பதையும் அறிய முடிகிறது. ஆகவே எந்த அடிப்படையில் பார்த்தாலும் மக்காவில் ஹாஜிகள்  கூடும் நாள் உலகம் முழுவதும் அரஃபா நாள் என்று கூற முடியாது. அதே சமயம் மக்காவைச் சாராதவர்கள் ஹஜ்ஜுக்காக மக்கா சென்றார்கள் என்றால் மக்காவில் செய்துள்ள முடிவின் படியே அவர் செயல்பட வேண்டும்.

தனது சொந்த ஊரில் 9ஆம் நாள் வந்து விட்டதா என்று விசாரித்து அதனடிப்படையில் செயல்படக் கூடாது. நாம் ஏதோ ஒரு நாட்டுக்குச் செல்கிறோம். அங்கே சூரியன் மறைவதை நாம் பார்க்கிறோம். உடனே நமது ஊருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு நமது ஊரிலும் சூரியன் மறைந்து விட்டதா என்று கேட்டு மஃரிப் தொழ மாட்டோம். நமது ஊரில் அது நண்பகலாக இருந்தால் கூட நாம் சென்ற ஊரில் மஃரிப் நேரம் என்றால் அதைத் தான் எடுத்துக் கொள்ள வேண்டும் அதே நாட்டில் காலையில் உன்னைச் சந்திக்க வருவேன் என்று ஒருவரிடம் கூறிவிட்டு நள்ளிரவில் கதவைத் தட்டி எங்கள் ஊரில் இது தான் காலை நேரம்; அதனால் சந்திக்க வந்துள்ளேன் என்று கூற மாட்டோம்.
சவூதிக்கு நாம் சென்றால் மட்டுமல்ல. சவூதிக்காரர்கள் இங்கே வந்தாலும் அவர்களும் இங்குள்ள நிலையைத் தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.சவூதி மன்னர் இந்தியா வந்தால் இந்தியாவில் சூரியன் மறையும் போது தான் அவர் மஃரிப் தொழ வேண்டுமே தவிர அவரது நாட்டில் மறையும் போது மஃரிப் தொழ முடியாது. எனவே நாம் ஹஜ்ஜுக்குச் சென்றால் அங்கே எந்த நாளாக எந்த நேரமாக உள்ளதோ அது தான் நம்மைக் கடடுப்படுத்தும் இதற்கு  எந்த ஆதாரமும் காட்டத் தேவையில்லை. 
எனவே நாம் ஹஜ்ஜுக்குச் சென்றால் அங்கே எப்போது அரஃபாவில் கூடுகிறார்களோ அப்போது தான் கூட வேண்டும். அங்கே எப்போது சுப்ஹ் தொழுகிறார்களோ அப்போது தான் சுபுஹ் தொழ வேண்டும்.இங்கே வந்து விட்டால் அதை ஏற்கத் தேவையில்லை. ஏற்றால் பெருநாள் தினத்தில் அரஃபா நோன்பு பிடிக்கும் நிலை. அரை நோன்பு கால் நோன்பு வைக்கும் நிலை எல்லாம் ஏற்படும்.
                                                                            
                                                                      நன்றி இணையம் safwanlanka.tk
                                            
                                                                           

Read more »

ஆசிரியர்கள் மாணவர்களை எப்படி வழி நடத்துவது? ஓர் உளவியல் அணுகல்.



பாத்திமா ஷஹானா (கொழும்பு)
‘என் இறiவா! கல்வி ஞானத்தை எனக்கு அதிகப்படுத்துவாயாக!’ என்று (நபியே) நீர் பிரார்த்திப்பீராக! (அல்குர்ஆன் 20:114)
நிச்சயமாக அல்லாஹ்வின் அடியார்களில் அவனை அஞ்சுபவ்கள் அறிஞர்கள்தாம். (அல்குர்ஆன் 35:28)
“அறிந்தவர்களும், அறியாதவர்களும் சமமாவார்களா? (அல்குர்ஆன் 39:9)
இந்த இறை வசனங்களிலிருந்து கல்வியின் சிறப்பையும், அதன் அவசியத்தையும் உணரக்கூடியதாகவுள்ளது. அநேகமானோர் கல்வி என்பது பாடசாலைகளில் கற்கப்படுவது மட்டும் என்ற தவறான கருத்தில் உள்ளனர். ஒரு மனிதன் பிறந்ததிலிருந்து இறக்கும் வரை கல்வி கற்கக்கூடியவனாகவே உள்ளான். 

கல்விவியலாளர்களின் கருத்துப்படி கல்வி அறிவானது மனிதனுக்கு மூன்று வழிகளில் கிடைக்கப் பெறுகின்றது. 

1) Informal - இம்முறையானது ஒருவனது குழந்தைப் பருவத்தில் 5 ½ வயது வரை தனது பெற்றோர், உறவினர், சுற்றுப்புறச்சூழல் ஆகியவற்றின் மூலம் கற்கும் கல்வி. இப்பருவத்தில் மூளையின் வளர்ச்சி அதி தீவிரமாக இருக்கும். குழந்தைகள் கூடுதலாக கேள்விகள் கேட்கும் பருவம். 

2) Formal - இம்முறை பாடசாலை சென்று கல்வி கற்கும் முறை. இது ஒருவரின் 5 ½ வயதில் பாடசாலையில் ஆரம்பமாகி கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகம் ஆகியவற்றில் கற்கும் கல்வி. 

3) Non formal - இம்முறையானது பாடசாலை, பல்கலைக்கழகங்கள் தவிர்ந்து நண்பர்கள், மீடீயாக்கள். இதர பொழுதுபோக்கு சாதனங்கள் மூலம் கற்கும் கல்வி. 

இன்றைய கல்வியின் நிலை.

இன்று மூலைமுடுக்குகளில் எல்லாம் சர்வதேச பாடசாலைகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகின்றது. சர்வதேசப் பாடசாலைகளில் தம் பிள்ளைகள் கல்வி கற்பதை நம் சமுதாயத்திலுள்ள பெரும்பாலான முஸ்லிம்கள் கௌரவமாக நினைக்கின்றனர். இதனால் பாடசாலையின் தரத்தைப் பற்றி அவர்கள் அக்கறை எடுப்பதில்லை. குறிக்கோளே இல்லாமல் பணத்தை வீண்விரயமாக்குவதில் நம் முஸ்லிம் சமுதாயத்தினர் முன்னணியில் உள்ளனர். 

கல்வி கற்கும் பாடசாலையை எவ்வாறு தேர்வு செய்வது?

ஒரு பாடசாலையின் தரத்திற்கு அப்பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், அதிபர், நிர்வாகம் என்பவற்றோடு அப்பாடசாலையின் பௌதீக வளமும் முக்கிய பங்கு வகிக்கின்றது. பௌதீக வளம் என்பது மாணவர்களுக்கு போதிய அளவிலான வகுப்பறைகளின் நிலப்பரப்பு, கட்டிடவசதி, தளபாடங்கள், விஞ்ஞான ஆய்வுகூடம், நூலகம், மைதானம் என்பனவாகும். மாணவர்களுக்கு கல்வி கற்பதில் ஆர்வத்தை ஏற்படுத்தும் அளவிற்கு பாடசாலை சூழல் அமைந்திருத்தல் வேண்டும். ஆனால் இன்று சர்வதேசப் பாடசாலைகள் என மூலைமுடுக்குகளில் இயங்கி வரும் பாடசாலைகளில் மாணவர்கள் கல்வி கற்பதற்கான உகந்த சூழல் காணப்படுவதில்லை. காரணம் இட வசதி போதாமை, பயிற்றுவிக்கப்பட்ட ஆசிரியர்கள் இல்லாமை, மைதானம் இல்லாமை, நூலகம் இல்லாமை, விஞ்ஞான ஆய்வுகூடம் இல்லாமை, ஒழுங்கற்ற நிர்வாகம் ஆகியனவாகும்.  

இதுபோக முஸ்லிம்களாகிய நாம் கருத்திற் கொள்ள வேண்டிய மிகவும் முக்கியமான விஷயம் நம் பிள்ளைகளை சேர்க்கும் பாடசாலையின் நடவடிக்கைகள் இஸ்லாமிய மார்க்க அடிப்படைக்கு உட்பட்டதா இல்லையா என்பது. இன்று பெரும்பாலான பெற்றோர்கள் இந்த விஷயத்தில் கோட்டை விடுகின்றனர். பாடசாலையின் தரத்தையும், கல்வியின் தரத்தையும் பரிசோதிக்கும் இவர்கள் அப்பாடசாலை இஸ்லாமிய மார்க்க வரம்புகளுக்கு உட்பட்டா இயங்குகின்றது என்பதை கவனிக்கத் தவறி விடுகின்றனர். நாம் பௌத்த மத நெறிகளைக் கொண்ட நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். நம் முஸ்லிம்களில் சிலர் தம் பிள்ளைகள் சிங்கள மொழி மூலம் கல்வி கற்க வேண்டும் என்ற ஆர்வத்துடன் சிங்களப் பாடசாலைகளில் பிள்ளைகளை சேர்க்கின்றனர். சிங்கள மொழி மூலம் கற்பதோ அல்லது சிங்கள பாடசாலைகளில் கற்பதோ தவறல்ல. ஆனால், அப்பாடசாலைகளில் கற்பிக்கும் ஆசிரியர்கள், அதிபர்கள் அவர்களது மத அனுஷ்டானங்களில் முஸ்லிம் மாணவர்களும் பங்கு பற்ற வேண்டும் என்று நிர்ப்பந்திக்கின்றனர். எனவே, அந்நிய பாடசாலைகளில் கல்வி கற்பதற்காக தங்கள் பிள்ளைகளை அனுமதிக்கும் பெற்றோர் தாமே தம் பிள்ளைகளை மார்க்கத்திற்கு முரணான காரியங்களில் ஈடுபடுவதற்கான சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக் கொடுக்கின்றனர். அத்தோடு நம் நாட்டில் பெரும்பாலான ஜும்ஆ உரைகள் தமிழிலேயே அமைந்திருப்பதால் சிங்கள, ஆங்கில மொழியில் கற்கும் மாணவர்கள் ஜும்ஆவில் தூங்கி விழும் நிலை காணப்படுகின்றது. இவர்களுக்கு தமிழ் மொழியும் கற்பிக்கப்பட வேண்டும்.   

இன்று பல முஸ்லிம் பாடசாலைகள் கூட பெயரளவில் முஸ்லிம் பாடசாலைகளாக உள்ளன. இஸ்லாமிய மார்க்கத்தில் இல்லாத பல நிகழ்ச்சிகளை உதாரணமாக மீலாது விழா, கலை விழா போன்றவை மட்டுமில்லாது இசை, நடனங்களை பாடமாகவும் பயிற்றுவிக்கின்றனர். ஏன் பெரும்பாலான முஸ்லிம் பாடசாலைகளில் இசை வாத்தியங்களை இயக்கும் குழுக்களும் காணப்படுகின்றன. இவற்றில் முஸ்லிம் மாணவர்கள் ஈடுபடுவதன் மூலம் மார்க்கத்திற்கு முரணாக நடக்க ஆர்வமூட்டப்படுகின்றனர். உண்மையில் அரசாங்க முஸ்லிம் பாடசாலைகளை எடுத்தால் நாம் இவ்வாறு எதிர்ப் பார்ப்பதற்கான சாத்தியங்கள் மிக மிகக் குறைவு. இன்று சில தனியார் முஸ்லிம் பாடசாலைகள் ஓரளவிற்கு மார்க்க வரையறைக்குள் இயங்குகின்றன.

ஆசிரியர்களுக்கு இருக்க வேண்டிய பண்புகள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இரண்டு விஷயங்களைத் தவிர வேறெதிலும் பொறாமை கொள்ளக்கூடாது. ஒரு மனிதருக்கு அல்லாஹ் வழங்கிய செல்வத்தை அவர் நல்ல வழியில் செலவு செய்தல்: இன்னொரு மனிதருக்கு அல்லாஹ் அறிவு ஞானத்தை வழங்கி, அதற்கேற்ப அவர் தீர்ப்பு வழங்குபவராகவும், கற்றுக்கொடுப்பவராகவும் இருப்பது (ஆகியவையே அந்த இரண்டு விஷயங்கள்)  
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அஸ்வுத் (ரழி) ஆதாரம்: புஹாரி 73

மேலுள்ள இந்த நபிமொழியிலிருந்து அல்லாஹ் தந்த கல்வி ஞானத்தைக் கொண்டு தாம் கற்றதை பிறருக்குக் கற்றுக் கொடுப்பதென்பது எவ்வளவு சிறப்பு வாய்ந்தது என்பது புலப்படுகின்றது. ஆனால் இன்று பெரும்பாலான ஆசிரியர்கள் ஆசிரியர் தொழிலை ஒரு தொழிலாக மட்டும் கருதி அதன் சிறப்பையும் அதிலுள்ள ஏராளமான நன்மைகளையும் மறந்து கல்வியைக் கற்றுக் கொடுப்பதில் ஆர்வத்துடன் ஈடுபடுவதில்லை. நாம் பிறருக்குக் கற்றுக் கொடுப்பதன் மூலம் கிடைக்கும் நன்மை நம்மிடம் கற்றவர் இன்னொருவருக்கக் கற்றுக் கொடுத்து பின்னர் அவர் இன்னொருவருக்கக் கற்றுக் கொடுத்து இவ்வாறு சங்கிலித் தொடர் போல் பயனடையும் அத்தனை நபர்கள் மூலமாகவும் கிடைத்துக் கொண்டே போகும். 

ஒரு மனிதன் மரணித்து விட்டால் மூன்ற காரியங்கள் தவிர மற்ற செயல்பாடுகள் முடிந்து விடும். அவை: நிலையான தர்மம், பிறர் பயன்பெறும் கல்வி, தனக்காக பிரார்த்தனை செய்யும் நல்லொழுக்கமுள்ள சந்ததி என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி), ஆதாரம்: முஸ்லிம் 3084 

ஆசிரியர்களின் கடமைகள், அவர்கள் எவ்வாறு மாணவர்களை வழி நடத்த வேண்டும் என்பவற்றை பார்ப்பதற்கு முன் ஆசிரியர்களுக்கு இருக்க வேண்டிய பண்புகளை நாம் அறிந்து கொள்வோம். ஆசிரியர்கள் என்பவர்கள் மாணவர்களை வழி நடத்துவதில் அளப்பறிய பங்காற்றக்கூடியவர்கள். மாணவர்களை சமூகத்திற்கு ஒரு நல்ல பொறுப்புள்ள பிரஜைகளாக உருவாக்குவதில் ஆசிரியர்களே அத்திவாரமாக இருக்கின்றனர். ஆசிரியர்கள் சீராக இருந்தால் தான் மாணவர்களுக்கு சீரிய வழியைக் காட்ட முடியும். கல்வியை மட்டும் கற்றுக் கொடுப்பது ஆசிரியர்களின் கடமை அல்ல. மாறாக, கல்வியோடு சேர்த்து ஒழுக்கம், பழக்கவழக்கங்கள், கல்வி கற்பதில் ஆர்வத்தை ஏற்படுத்துதல், மாணவர்களின் தனித் திறமைகளை வெளிக் கொண்டு வருதல் ஆகியவற்றுடன் ஏராளமான நற் பண்புகளை கற்பித்தல் ஆசிரியர்களின் கடமைகளாகும். 

ஆசிரியர்கள் முதலில் பொறுமையின் சின்னமாகத் திகழ வேண்டும். ஒவ்வொரு மாணவர்களும் வெவ்வேறு சூழலிலிருந்து பாடசாலைக்கு சமூகமளிக்கின்றனர். அவர்களின் மனநிலையும், உடலமைப்பும் ஒவ்வொரு மாணவர்களுக்கிடையே வித்தியாசப்படும். எனவே, ஆசிரியர்கள் ஒவ்வொரு மாணவர்களுக்கு எற்றவாறு தம்மை மாற்றிக் கொண்டு உளவியல் ரீதியில் அவர்களை அன்போடு அவர்களை அணுக வேண்டும். 

மாணவர்களைப் பொருத்த வரை அவர்கள் மூன்று பிரிவினர்களாக பிரிக்கப்படுகின்றனர். 

1) அதி விவேகமுள்ள மாணவன் (Gifted child)

2) சாதாரண மாணவன் (Normal child)

3) பின் தங்கிய மாணவன் (Backward child)

ஒரு வகுப்பறையிலுள்ள இம்மூன்று வகை மாணவர்களையும் சமாளிக்கக்கூடிய தகுதி ஆசிரியருக்கு இருக்க வேண்டும். சளிப்படையாமல் பின் தங்கிய மாணவனை அலட்சியம் செய்யாமல் கூடுதல் கவனம் எடுக்க வேண்டும். அன்புடனும், ஆதரவுடனும் அம்மாணவனை அணுகினால் ஏனைய சக மாணவர்கள் மத்தியில் பின் தங்கிய மாணவனுக்கு தாழ்வு மனப்பான்மை ஏற்படாது. இதனால் சக மாணவர்கள் மத்தியில் சகஜமாகப் பழகக்கூடியவாறு இருக்கும். தன் வகுப்பறையிலுள்ள மாணவன் மேலுள்ள மூன்று பிரிவுகளில் எப்பிரிவைச் சேர்ந்த மாணவன் என மாணவர்களை அவதானிப்பதன் மூலம் ஒரு ஆசிரியருக்கு கிரகிக்கக்கூடியதாக இருக்க வேண்டும்.

மாணவனுக்கு கல்வி கற்பதில் ஏற்படும் தடைக்கல்லை அகற்றி அம்மாணவனுக்கு கல்வி கற்பதற்கான படிக்கல்லை ஆசிரியர் ஏற்படுத்த வேண்டும். ஒரு மாணவனுக்கு புரிய வைப்பதற்கு எத்தனை தடவை சொல்லிக் கொடுக்க வேண்டுமோ அத்தனை தடவை சலிப்படையாமலும், முகம் சுழிக்காமலும், கோபப்படாமலும் சொல்லிக் கொடுக்க வேண்டும். ஒரு ஆசிரியர் தியாக மனப்பான்மை கொண்டவராக இருத்தல் வேண்டும். 

நபி (ஸல்) அவர்கள் ஏதேனும் ஒரு வார்த்தை பேசினால் தாம் கூறுவது நன்கு புரிந்துகொள்ளப்பட வேண்டும் என்பதற்காக மும்முறை அதனைத் திரும்பத் திரும்பச் சொல்வார்கள். மக்களிடம் வந்தால் அவர்களுக்கு மும்முறை ஸலாம் சொல்வார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரழி) அவர்கள், ஆதாரம்: புஹாரி 95  

மாணவர்கள் சிறு பராயத்திலிருந்தே ஆசிரியர்களை அவதானித்து அவர்களைப் போல் இருக்க ஆசைப்படுவர். இதனால் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு எடுத்துக் காட்டாக விளங்க வேண்டும். ஒழுக்க விழுமியங்களை மாணவர்களுக்குக் கற்பித்து தாம் அதற்கு மாற்றமாக நடக்கக்கூடாது.எந்த நிலையிலும் மாணவர்களை அரவணைக்கக்கூடியவர்களாகவும், தன்னம்பிக்கை ஊட்டக்கூடியவர்களாகவும் ஆசிரியர்கள் இருக்க வேண்டும்.

இன்றைய பெரும்பாலான முஸ்லிம் ஆசிரியர்களின் நிலை ?

இன்று பெரும்பாலான முஸ்லிம் ஆண் ஆசிரியர்கள் அவர்களின் சொந்த வியாபார நோக்கங்களுக்காக தங்கள் ஊர் பாடசாலைகளிலிருந்து மாறுதல்  பெற்று கொழும்பிற்கு வந்து பாடசாலைக்கு அதிக விடுமுறை போட்டு தம் வியாபாரத்தைக் கவனிக்கின்றனர். பாடசாலைக்கு சமூகமளிக்கும் நாட்களில் கூட மாணவர்களுக்குக் கற்பிக்கும் நோக்கம் இல்லாமல் மாணவர்களுடன் அரட்டை அடித்து நேரத்தை வீணடித்து விட்டு செல்கின்றனர். இதற்கு இஸ்லாத்தை கற்பிக்கும் மௌலவி ஆசிரியர்களும் விதிவிலக்கல்ல.

மாணவர்களுக்குக் கடமையான கற்பித்தலை முறையாக செய்யாத காரணத்தினால் கற்பித்தலுக்காக வாங்கும் சம்பளம் அவர்களுக்கு ஹராமாகின்றது. சிலர் பாடசாலைகளில் கற்பிக்காது மாணவர்களை அவர்களது பிரத்தியேக வகுப்புகளுக்கு வரச் சொல்லி மாணவர்களிடமிருந்து பணத்தை சூறையாடுகின்றனர். 

மேலும் ஆண்,பெண் ஒன்றாகப் படிக்கும் பாடசாலைகளில் சில ஆசிரிய, ஆசிரியர்கள் காதல் விவகாரத்தில் ஈடுபட்டு மாணவர்கள் முன்னிலையில் முன்மாதிரி இல்லாமல் நடந்து கொள்கின்றனர். சில ஆசிரியர்கள் இதற்கு மாணவர்களை தம் தூதுக்கு பயன்படுத்துகின்றனர். இது வன்மையாக கண்டிக்கப்பட வேண்டிய விஷயம். நம் நாட்டிலுள்ள முஸ்லிம் அரசியல்வாதிகள் ஆண், பெண் கலந்துள்ள முஸ்லிம் பாடசாலைகளை தனித் தனி ஆண், பெண் பாடசாலைகளாக மாற்ற எந்தவித முயற்சியும் எடுக்காமை வெட்கப்பட வேண்டிய விஷயம். 

இன்று பெரும்பாலான ஆசிரியர்கள் கற்பித்தலை ஒரு தொழிலாக மட்டும் கருதி சேவை மனப்பான்மை இல்லாமல், கற்பிக்கின்றோம் என்ற பெயரில் தாம் கற்பிக்கும் விடயம் மாணவர்களை சென்றடைகின்றதா? அல்லது தாம் கற்பிக்கும் முறை சரியாக இருக்கின்றதா? ஒன்றும் பார்ப்பதில்லை. ஒவ்வொரு ஆசிரியரும் ஒவ்வொரு மாணவனையும் உளவியல் ரீதியாகவே அணுக வேண்டும். ஆசிரியர்கள் ஆர்வத்துடன் கற்பிக்காத காரணத்தினாலேயே மாணவர்கள் பாட நேரத்தில் வேறு சிந்தனையுடனும், குறும்புத்தனத்துடனும் நேரத்தைக் கழிக்கின்றனர். சில ஆசிரியர்கள் மாணவர்கள் கேள்விகள் கேட்கும்போது கோபப்பட்டு எரிந்து விழுகின்றனர். இவர்கள் மாணவர்களுக்கு நம்பிக்கையூட்டுவதற்கு பதிலாக கல்வியில் வெறுப்பை ஏற்படுத்துகின்றனர். இதனாலேயே மாணவர்கள் ஆசிரியர்களுக்கு பட்டப்பெயர் சூட்டுவதற்கு அவர்களே காரணமாகின்றனர். எந்த ஒரு செயலையும் நன்மையையும், இறை திருப்தியை நாடியே செய்ய வேண்டும். 

“ஒருவரிடம் (கல்வியைப் பற்றி) கேள்வி கேட்கப்பட்டு, அதை அவர் (அறிந்த பின்பும்) மறைத்தால், மறுமை நாளில் அவருக்கு நெருப்பிலான கடிவாளம் போடப்படும்” என்று நபி (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி) , ஆதாரம்: அபூதாவூது 3658

சில பாடசாலைகளில் பயிற்றுவிக்கப்பட்ட ஆசிரியர்களின் பற்றாக்குறை காரணமாக தற்காலிக (volunteersஆசிரியர்கள் மூலம் கல்வி கற்பிக்கின்றனர். இவர்கள் பயிற்றுவிக்கப்படாத காரணத்தினால் மாணவர்களுடன் எவ்வாறு உளவியல் ரீதியல் நடந்து கொள்ள வேண்டும் என்பதை அறியாதுள்ளனர். இதனால் பாதிக்கப்படுவது நம் பிள்ளைகளே. இன்று முஸ்லிம் ஆசிரியர்களின் எண்ணிக்கை பற்றாக்குறையாகவே உள்ளது. இந்த இடத்திலும் முஸ்லிம் அரசியல்வாதிகள் ஊமைகளாகவே உள்ளனர். 

இன்று ஏனைய மாற்று மத நண்பர்களின் பாடசாலைகளுடன் ஒப்பிடுகையில் முஸ்லிம் பாடசாலைகளே பின் தங்கிய நிலையில் காணப்படுகின்றது. காரணம் பெற்றோர் தம் பிள்ளைகளின் கல்வியில் அக்கறைக் காட்டாமை, ஆசிரியர்களின் சேவை மனப்பான்மையற்ற நிலை, அதிபரின் நிர்வாக சீர் குழைவுகள் ஆகியனவாகும். இஸ்லாம் கல்விக்கு கொடுத்துள்ள முக்கியத்துவத்தையும், அதனால் ஏற்படும் இம்மை, மறுமை நலன்களை மக்கள் அறியாமல் செயல்படுவதே இவ் வகையான பொடுபோக்கு நிலைக்கு முக்கிய காரணமாகும். ஆசிரியர் தொழிலில் ஈடுபடுபவர்கள் சுய இலாபம் கருதாமல் தியாக மனப்பான்மையுடன் அல்லாஹ்விற்கு அஞ்சி செயற்பட வேண்டும்.  

அன்பின் ஆசிரியர்களே!

இஸ்லாமிய மார்க்கத்தைப் பின்பற்றி நியாயமான முறையில் தெளிவான கல்வியை மாணவர்களுக்கு கற்பிப்பதின் மூலம் நமது சமுதாயத்தை முதன்மை சமுதாயமாக உயர்த்துவதற்கு உதவுவதின் மூலம் இம்மை மறுமை வாழ்வை சீராக்கிக் கொள்வோமாக!

                                                                       நன்றி இணையம் rasminmisc.blogspot.com

Read more »

தாடி வளர்ப்பதினால் ஏற்படும் ஆன்மீக, அறிவியல் நன்மைகள்.



பாத்திமா ஷஹானா (கொழும்பு)
இன்று தாடி வைக்கும் ஆண்களின் எண்ணிக்கை முஸ்லிம்கள் மத்தியிலும் குறைந்து வருவதைக் காணக்கூடியதாகவுள்ளது. இன்றைய இளைய சமுதாயத்தினர் உலக நடைமுறைக்கு அமையவே (fashion) தாடி வைக்கின்றனர். ஒவ்வொரு விதமான நவீன வடிவங்களில் (styles) தலை முடிகளை வெட்டுவது போல் தாடிகளையும் ஒவ்வொரு நவீன வடிவங்களில் வடிவமைத்து அந்நிய கலாசாரத்திற்கு ஒப்பாக நடந்து கொள்கின்றனர். 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் (மாற்றுக் கொள்கையில் உள்ள) ஒரு கூட்டத்தாருக்கு ஒப்ப நடக்கின்றாரோ அவர் அவர்களையே சார்ந்தவர். 

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரழி) ஆதாரம்: அபூதாவூத் 3512

இஸ்லாத்தின் பார்வையில் தாடி. 

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இணைவைப்பாளர்களுக்கு மாறு செய்யுங்கள், தாடிகளை வளரவிடுங்கள். மீசையை ஒட்ட நறுக்குங்கள்.

அறிவிப்பவர்: உமர் (ரழி) , ஆதாரம்: புஹாரி 5892

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மீசையை ஒட்ட கத்தரியுங்கள். தாடியை வளர விடுங்கள். மஜூசி (நெருப்பு வணங்கிகளுக்கு)களுக்கு மாறு செய்யுங்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி), ஆதாரம்: முஸ்லிம் 435

மேற்கண்ட செய்திகளில் இருந்து இஸ்லாம் தாடி வளர்ப்பதைக் வலியுறுத்திப் பேசுவதையும், அந்நிய கலாச்சாரத்திற்கு ஒப்பாக விதவிதமாக ஒவ்வொரு வடிவங்களில் தாடி வளர்ப்பதை தடை செய்வதையும் நாம் தெளிவாக அறிந்து கொள்ள முடிகிறது. 

அல்லாஹ்வின் படைப்பில் அவன் எந்த ஒன்றையும் வீணாக படைக்கவில்லை.

வானத்தையும், பூமியையும் அவற்றுக்கு இடைப்பட்டதையும் வீணுக்காக நாம் படைக்கவில்லை. இது (ஏக இறைவனை) மறுப்போரின் எண்ணம். மறுப்போருக்கு நரகம் எனும் கேடு உள்ளது. (அல்குர்ஆன் 38:27)

ஆண்களுக்கு மட்டும் விசேஷமாக முகத்தில் தாடி வளரும் வன்னம் அல்லாஹ் படைத்திருக்கின்றான் என்றால் அதை முழுவதுமாக மழித்துக் கொள்வதில் எந்த அர்த்தமும் இல்லை. தாடி மழித்துக் கொள்வதற்குறிய ஒன்றாக இருந்திருந்தால் இறைவன் மனிதனைப் படைக்கும் போதே பெண்களைப் போல் ஆண்களுக்கும் தாடி வளராத வன்னம் படைத்திருப்பான். 

தாடி வைப்பதில் ஏராளமான நன்மைகள் இருப்பதனால் தான் இஸ்லாம் தாடி வைப்பதை வலியுறுத்துகின்றது. விஞ்ஞான, மருத்துவ ஆய்வுகளும் இதை ஊர்ஜிதம் செய்கின்றன. 

விஞ்ஞான ஆய்வுகளின் படி தாடி வளர்ப்பதால் ஏற்படும் நன்மைகள்.

சமூக மனோ தத்துவவியலாளர் Dr.Freedman என்பவரால் நடத்தப்பட்ட ஆய்வுகளின் படி ஆண்கள் தாடி வைப்பதன் மூலம் பெண்கள் மத்தியில் கவர்ச்சியுள்ளவர்களாகவும், ஆண்மையுள்ளவர்களாகவும் இருப்பதுடன் பெண்கள், தாடி வைத்திருக்கும் ஆண்கள் மத்தியில் அவர்களது பெண் தன்மையை உணரக்கூடியவர்களாகவும் உள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார். 

1973ல் கலிபோனிய ஸ்டேட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மனோதத்துவவியலாளர் Robert J. Pelligrini என்பவர் தாடி வைத்த 22 - 25 வயதெல்லையுடைய எட்டு இளம் ஆண்களை தமது பரிசோதனைக்கு உட்படுத்தினார். அதாவது இந்த எட்டு ஆண்களையும் கீழுள்ள நான்கு நிலைகளில் புகைப்படம் எடுத்தார். 

1.முழு தாடியுடன்

2. முகத்தின் இரு பக்கங்களில் சிறு கோடு போன்ற சிறிய தாடியுடன்  

3. மீசையுடன்

4. தாடி முழுவதும் மழித்து (தாடி இல்லாமல்)

ஒவ்வொருவரிலிருந்து பெறப்பட்ட நான்கு புகைப்படங்களாக மொத்தம் 32 புகைப்படங்களை மனோதத்துவவியல் படிக்கும் 64 ஆண் மாணவர்களுக்கும், 64 பெண் மாணவர்களுக்குமாகக் கொடுத்து புகைப்படங்களில் உள்ளவர்களின் உருவங்களை மதிப்பிடுமாறு கூறினார். ஒவ்வொரு புகைப்படமும் இரு ஆண், இரு பெண் வீதம் மதிப்பிடப்பட்டது. Pelligrini இன் ஆய்வின் முடிவில் பெறப்பட்ட முடிவானது முகத்தில் அதிகளவில் முடியுள்ளவர்கள் தோற்றத்தில் ஆண்மையுள்ளவர்களாகவும்,அழகிய தோற்றமுடையவர்களாகவும், கம்பீரமுடையவர்களாகவும்,தக்க வளர்ச்சியுள்ளவர்களாகவும், துணிவுள்ளவர்களாகவும், பெருந்தன்மையுடையவர்களாகவும், ஆரோக்கியமானவர்களாகவும், கவர்ச்சியானவர்களாகவும் இருக்கின்றனர் என்பதாகும். 

தாடி வைப்பதனால் ஏற்படும் மருத்துவ நன்மைகள்.

மருத்துவ ஆய்வுகளின் படி தாடி வளர்ப்பதானது ஒரு மனிதனை தொண்டை, பல்ஈறு சம்பந்தமான நோய்களிலிருந்து தடுக்கின்றது. மேலும், தாடியானது முகத்தின் சருமத்திற்கு கெடுதி விளைவிக்கக்கூடிய இரசாயன வகைகளிலிருந்தும், மாசுள்ள வளிமண்டலத்திலிருந்தும் கெடுதி ஏற்படாமல் பாதுகாக்கும். மேலும் இதனால் முகத்தில் ஏற்படும் சுருக்கங்கள் குறைந்து வயதான தோற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் குறைவாகக் காணப்படும். தாடி சருமத்தை மூடி காணப்படுவதால் sebaceous சுரப்பிகளின் மூலம் பக்டீரியா தொற்றுக்களிலிருந்து பாதுகாக்கப்படுவதால் முகப்பருக்கள், புள்ளிகள் ஏற்படுவது தடுக்கப்படும். தாடி முகத்தை குளிர்ச்சியாக வைத்திருப்பதுடன் நாடியையும் அபாயங்களிலிருந்து காப்பாற்றும். அத்துடன் தாடி வைப்பதனால் சுவாசக் கோளாறுகள் ஏற்படுவதும் தடுக்கப்படும். 

மாற்று மத அமெரிக்க மருத்துவர் Charles Holmes  என்பவரின் கருத்து.

இந்த மருத்துவர் கூறுகின்றார் “எனக்குப் புரியவில்லை ஏன் மக்கள் தாடி வைப்பதில் அதிருப்தி அடைகின்றனர். மக்கள் தலையில் முடி வளர்த்திருக்கும் போது முகத்தில் முடி வளர்ப்பதில் என்ன தவறு இருக்கின்றது? தலை முடி கொட்டும் போது வெட்கத்திற்குள்ளாகும் மனிதன் தாடியை முழுவதுமாக மழிப்பது என்னை ஆச்சரியத்திற்குள்ளாக்குகின்றது. 

நீண்ட தாடியானது மனிதனின் கழுத்துப் பகுதியை குளிர்த் தாக்கங்களிலிருந்து பாதுகாக்கின்றது. நாம் அறிந்த வகையில் தாடி வளர்ப்பதானது மத அனுஷ்டானம் மட்டும் இன்றி மனிதனுக்கு நிறைய நன்மை பயக்கக்கூடியதாகவுள்ளது. முன்னைய காலத்து மருத்துவர்கள், தத்துவஞானிகள் கூட தாடி வளர்த்திருக்கிறார்கள். உதாரணமாக சார்ள்ஸ் டார்வின், லுயிஸ் பெஸ்டர், ஆபிரகாம் லிங்கன் இன்னும் பலர். ஆனால் மக்கள் சமீப காலமாகத் தான் மக்கள் தாடி வைப்பதிலிருந்து விலகி நடக்கின்றனர்”. 

முஸ்லிம்கள் ஏன் தாடி வளர்ப்பதில் பின்வாங்குகின்றனர்?

அநேக முஸ்லிம் சகோதரர்கள் தாடி வளர்ப்பதில் ஆர்வம் காட்டினாலும் அவர்களின் மனைவிமார்களுக்காக வேண்டி தாடியை மழிக்கும் நிலையை காணக்கூடியதாகவுள்ளது. இன்று பெரும்பாலான இஸ்லாமியப் பெண்கள் தங்கள் கணவர்கள் தாடி வளர்ப்பதை இழிவாகக் கருதுகின்றனர். மீசையை ஒட்ட கத்தரித்து தாடியை வளர்ப்பது இறைத் தூதர் (ஸல்) அவர்களால் வலியுறுத்தப்பட்ட சிறந்த காரியம் என்பதை இப் பெண்கள் மறந்து விட்டனர். தாடி வைக்காத கணவர்களுக்கும் தாடியின் சிறப்பையும் அதனால் ஏற்படும் நன்மைகளையும் எடுத்துக்கூறி கணவர்களுக்கு தாடி வைக்க ஊக்குவிக்கக்கூடியவர்களாக பெண்கள் இருக்க வேண்டும். 

மேலும், ஊடகங்களும் தாடி வைத்தவர்களை பயங்கரவாதிகளாக சித்தரித்துக் காட்டுவதால் இன்று மேலைத்தேய நாடுகளில் வசிக்கும் ஆசிய நாட்டவர்கள் கூட தாடி வைப்பதில் பயந்த நிலையில் உள்ளனர். 

மேலும், இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தாடி வளர்ப்பதை வலியுறுத்தியது மட்டுமல்லாமல் அதை எவ்வாறு அழகாகவும், மற்றவர்கள் விரும்பும் வன்னம் வைக்க வேண்டும் எனவும் காட்டித் தந்துள்ளார்கள். 

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யூதர்களும் கிறிஸ்தவர்களும் (முடிகளுக்குச்) சாயமிடுவதில்லை. ஆகவே, நீங்கள் (முடிகளுக்குச் சாயமிட்டு) அவர்களுக்கு மாறு செய்யுங்கள். 

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), ஆதாரம்: புஹாரி 5899

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அவர்களிடம் இருந்தவற்றிலேயே நல்ல மணமுடைய வாசனைப் பொருளை நான் பூசி வந்தேன். எந்த அளவிற்கென்றால் அந்த நறுமணப் பொருளின் மினுமினுப்பை அவர்களுடைய தலையிலும் அவர்களுடைய தாடியிலும் என்னால் காண முடிந்தது.  

ஆதாரம்: புஹாரி 5923

நாம் தற்போது வாழ்ந்து கொண்டிருக்கும் காலப்பகுதியில் ஏராளமான பெண்கள் ஆண்களுக்க ஒப்பாகவே தம் உடைகளையும், தலை முடிகளையும் வைத்துக் கொள்கின்றனர். அதேபோல் இன்று பல ஆண்கள் மத்தியில் பெண்களைப் போல் தலை முடி வளர்ப்பதும் பிரபல்யம் ஆகி வருகின்றது.  அநேக சந்தர்ப்பங்களில் அவர்களுக்கிடையில் ஆணா, பெண்ணா என்ற வித்தியாசமே தெரியாதுள்ளது. இத்தகைய நிலையில் ஆண்கள் தாடி வைப்பதானது அவர்களுக்கு சிறப்பான தனித்துவத்தைக் காட்டுவது மட்டுமில்லாமல் ஆண்களைப் போல் தம் நடை, உடை, பாவனையை அமைத்துக் கொள்ள விரும்பும் பெண்களுக்கும் தாடி சாவு மணியாக அமையும்.

அன்பின் இஸ்லாமிய சகோதரர்களே தாடி வைத்தல் என்ற நபி வழியை நடை முறைப்படுத்தி இவ்வுலகிலும், மறுமையிலும் வெற்றி பெருவோமாக! 

                                                                       நன்றி இணையம் rasminmisc.blogspot.com
                                                                   
                                                              

Read more »

மனித வாழ்வை நாசப்படுத்தும் குரோதம்.





பசி, தூக்கம், தாகம், போன்ற உடலியல் சார்ந்த உணர்ச்சிகள் மனிதனுக்கு இருப்பதைப் போல் கோபம், புன்னகை, சந்தோஷம், அமைதி, அழுகை பொறாமை, வெறுப்பு போன்ற உளவியல் சார்ந்த குணங்களும் மனிதனின் பிறவியிலேயே அவனுடன் ஒட்டி இருக்கத் தான் செய்கிறது.

மனித வாழ்க்கையில் பலவிதமான சிக்கள்கள் பிரச்சினைகள் எல்லாம் மனிதனுக்கு ஏற்படுகின்றன. அந்தப் பிரச்சினைகள் அனைத்திற்கும் காரணமாக அவனுடைய உளவியல் தொடர்பான குணங்களே இருப்பதை நாம் காணமுடிகிறது.

அடுத்தவன் மேல் கொள்ளும் கோபம், பொறாமை, சந்தேகம் என்று அனைத்தும் சேர்ந்து பலவிதமாக சிக்கள்களையும் வாழ்வில் ஏற்படுத்துவதை நாம் உணர முடிகிறது.

மனிதனின் தீய குணங்களை நாம் பட்டியல் போட்டுப் பார்த்தால் அல்லது அந்த தீய குணங்களில் மிகவும் பாரிய தாக்கங்களை உண்டுபண்ணக் கூடிய பிரச்சினை எது என்பதை நாம் தேடிப்பார்த்தால் அது ஒரு மனிதன் இன்னொரு மனிதன் மீது கொள்ளும் குரோதமாகத் தான் இருக்க முடியும்.

இந்தக் குரோத மனப்பான்மையின் காரணமாக மனிதன் தனது நிம்மதியையும் கெடுத்து மற்றவர்களின் நிம்மதியையும் பாலாக்கிவிடுகிறான்.

அடுத்தவர்கள் நன்றாக வாழக்கூடாது. தன்னை விட உயர்ந்த இடத்தில் யாரும் இருக்கக் கூடாது. தான் மாத்திரம் தான் எப்போதும் வசதி வாய்புகள் உள்ளவனாக இருக்க வேண்டும். அடுத்தவனிடத்தில் இருக்கும் அனைத்தும் தனக்கு சொந்தமானதாக மாற வேண்டும் போன்ற இன்னோரன்ன கெட்ட குணங்களை இந்த குரோத மனம்பாண்மை தான் தோற்றுவிக்கிறது.

இந்தத் தீய குணத்தினால் நமது குடும்பங்கள் தொடங்கி உலக அளவில் பல விதமான பிரச்சினைகளும் உருவெடுப்பதை நாம் காண முடிகிறது.

தீய எண்ணங்களே பாவத்தின் முதல் படி.

ஒரு மனிதன் பாவத்திற்கு செல்வதற்கு முதல் காரணமாக அமைவது அவனுடைய உள்ளமும், அதில் தோன்றும் கெட்ட எண்ணங்களும் தான். தீய எண்ணங்களை பற்றி தெளிபுபடுத்தும் இறைவன் அதை விட்டும் விலகிவிடும் படி நமக்கு எச்சரிக்கை விடுக்கிறான்.

நம்பிக்கை கொண்டோரே! ஊகங்களில் அதிகமானதை விட்டு விலகிக் கொள்ளுங்கள்! சில ஊகங்கள் பாவமாகும். துருவித் துருவி ஆராயாதீர்கள்! உங்களில் ஒருவர் மற்றவரைப் புறம் பேசாதீர்கள்! உங்களில் எவரேனும் இறந்த தமது சகோதரனின் மாமிசத்தைச் சாப்பிட விரும்புவாரா? அதை வெருப்பீர்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் மன்னிப்பை ஏற்பவன். நிகரற்ற அன்புடையவன். (49-13)

ஒரு மனிதனின் உள்ளத்தில் குரோதம் என்ற தீய குணம் குடி கொள்வதற்கு முதல் காரணமாக அமைவது இந்த தீய எண்ணங்கள் தான். தீய எண்ணங்கள் குரோதங்களாக மாற்றம் பெற்று அந்த குரோதங்கள் மற்றவர்களைப் பற்றி பேசுவதற்கும், அவர்களைப் பற்றி ஆராய்வதற்கும் வழிவகைகளை உண்டாக்குகிறது. சில நேரங்களில் அதுவே பலவித பாரதூரமான விளைவுகளையும் உண்டாக்கி விடுகிறது.

எந்தளவுக்கென்றால் குரோதம் என்ற இந்த தீய குணத்தினால் கொலை வரை சென்ற பிரச்சினைகளும் நிறையவே உண்டு.

பேச்சில் உண்டாகும் குரோதத் தனம்.

குரோதத்தை யார் மனதில் கொண்டிருக்கிறாரோ அவருடைய பேச்சிலும் அது வேளிப்படுவதை நாம் காண முடியும். சட்டியில் உள்ளதுதான் துடுப்பில் வரும் என்று சொல்வதைப் போல் மனதில் உள்ளது பேச்சில் வெளிப்படும்.

நபியவர்களின் காலத்தில் மனதில் குரோதத்தை வைத்துக் கொண்டிருந்த யுதர்கள் நபியவர்களைப் பற்றிய கொண்டிருந்த குரோதங்களை தங்கள் நாவுகளினால் வெளிப்படுத்தியதை நாம் ஹதீஸ்களில் காணக் கிடைக்கிறது.

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: யூதர்கள் (ஒரு முறை) நபி (ஸல்) அவர்களிடம் வந்து, (முகமன் கூறும் சாக்கில்) "அஸ்ஸாமு அலைக்க'' ("உங்கள் மீது மரணம் உண்டாகட்டும்'') என்று கூறினார்கள். நான் அந்த யூதர்களைச் சபித்தேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், "உனக்கென்ன நேர்ந்தது? (ஏன் அவர்களைச் சபிக்கிறாய்?)'' என்று கேட்டார்கள்.  நான், "அவர்கள் கூறியதைத் தாங்கள் செவியுறவில்லையா?'' என்று கேட்க,நபி (ஸல்) அவர்கள்,’"நான்  (அவர்களுக்கு பதிலளித்த போது) அவர்களிடம், "வ அலைக்கும்-(உங்கள் மீதும் அவ்வாறே உண்டாகட்டும்)'என்று கூறியதை நீ கேட்கவில்லையா?'' என்று சொன்னார்கள். (புகாரி - 2935) 

நபியவர்களை சந்திக் வந்த யுதர்களின் கூட்டம் நபியவர்களுக்கு சிறந்த முறையில் ஸலாம் சொல்வதற்கு பதிலாக வார்த்தை ஜாலத்தின் மூலம் தங்கள் குரோதத்தை வெளிப்படுத்தினார்கள்.

அதாவது அஸ்ஸலாமு அலைக்க (உங்களுக்கு சாந்தி உண்டாகட்டும்!) என்று சொல்வதற்கு பகரமாக நபியின் மீது குரோதம் கொண்ட யுதர்கள்அஸ்ஸாமு அலைக்க” (உங்களுக்கு மரணம் உண்டாகட்டும்”) என்று நபியைப் பார்த்துக் கூறுகிறார்கள். யுதர்களின் தீய எண்ணத்தை புரிந்து கொண்ட நபியவர்கள் உடனே அவர்களைப் பார்த்து வஅலைக்கும்” (உங்கள் மீதும் அவ்வாறே உண்டாகட்டும்என்று பதில் அளித்தார்கள்.

அதே போல் “ எங்களை கவணித்து வழி நடத்துங்கள்” என்ற வார்த்தையை நபியவர்களின் மேல் கொண்ட குரோதத்தின் காரணமாக யுதர்கள்எங்களின் ஆடு மேய்க்கும் இடையரே” என்ற அர்த்தத்தில் பயண்படுத்தியதாக அல்லாஹ் திருமறைக் குர்ஆனிலே (2-104) நமக்கு சொல்லிக் காட்டுகிறான்.

நபித் தோழர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை ராஇனா” ( “எங்களை கவணித்து வழி நடத்துங்கள்”) என்று கூறி வந்தார்கள். ராஇனா என்ற வார்த்தைக்கு எங்களின் ஆடு மேய்க்கும் இடையரே என்ற ஒரு அர்த்தமும் இருக்கும் காரணத்தினால் யுதர்கள் நபியவர்களை இந்த இரண்டாவது கருத்தை மனதில் நினைத்துக் கொண்டு அழைத்தார்கள்.

அனைவரின் உள்ளத்தையும் அறிந்த இறைவனோ யுதர்களின் குரோத குணத்தை அறிந்து ராஇனா” என்ற வார்த்தைக்கு பதிலாக உன்ளுர்னாஎன்ற வார்த்தையை குறிப்பிடும் படி இறைவன் வலியுறுத்துகிறான்.

உன்ளுர்னா” என்ற வார்த்தைக்கு எங்களை கவணித்து வழி நட்த்துங்கள்என்ற அர்த்தம் மாத்திரமே உள்ளதினால் தான் இறைவன் மேற்கண்ட வார்த்தையை பயண்படுத்தச் சொல்கிறான்.

அதே போல இன்னொரு இடத்திலும் திருமறைக் குர்ஆன் இப்படி சொல்கிறது.

யுதர்களில் சிலர், வார்த்தைகளை அதற்குறிய இடங்களிலிருந்து மாற்றுகின்றனர். செவியுற்றோம். மாறு செய்தோம். (நாங்கள் கூறுவது) உமக்கு சரியாகக் கேட்க்காமல் போகட்டும் எனவும் ராஇனா” எனவும் கூறுகின்றனர். இம்மார்க்கத்தை குறைவு படுத்திட தமது நாவுகளால் (வார்த்தைகளை) மாற்றிக் கூறுகின்றனர். செவியுற்றோம். கட்டுப்பட்டோம். செவிமடுங்கள்! உன்ளுர்னா என்று அவர்கள் கூறியிருந்தால் அது அவர்களுக்குச் சிறந்ததாகவும், நேர்மையானதாகவும் இருந்திருக்கும். எனினும் அவர்கள் (தன்னை) மறுப்பதால் அவர்களை அல்லாஹ் சபித்து விட்டான். அவர்களில் சிலரைத் தவிர (மற்றவர்கள்) நம்பிக்கை கொள்ள மாட்டார்கள். (4 - 46)

அதஃனா என்ற சொல் கட்டுப்பட்டோம் என்ற ஒரு பொருளைக் கொண்ட சொல்லாக இருந்தாலும் அதஃனா என்று கூறுவது போல் பாவனை செய்து“ அஸய்னா” என்று குரோதத்தை மனதில் நிறப்பிக் கொண்டு நபியவர்களை நோக்கி யுதர்கள் கூறி வந்தனர். இதன் பொருள் மாறு செய்தோம் என்பதாகும். இவர்களின் இந்த குரோதப் போக்குத்தான் மேற்கண்ட (4 - 46) வசனத்தில் சுட்டிக்காட்டப் படுகிறது.  

கொலை செய்யத் தூண்டும் குரோதம்.


குரோதம் என்ற இந்த உளவியல் நோயின் உச்ச கட்டம் கொலை வரை சென்று முடிவதையும் நாம் பார்க்க முடியும். அதாவது அடுத்தவன் மேல் கொண்ட குரோத வெறியின் உச்ச கட்டம் சம்பந்தப் பட்டவரை கொலை செய்தாவது அழித்தொலிக்க வேண்டும் என்பதே அந்த எண்ணம் தரும் இறுதி முடிவாகும்.

காபிர்களுக்கு நபியவர்களின் மேல் ஏற்பட்ட குரோதம் அவர்களை கொலை செய்தாவது அழிக்க வேண்டும் என்றளவுக்கு அவர்களை கொண்டு சென்றது அதற்கான அனைத்து நடவடிக்கைகளிலும் அவர்கள் இறங்கினார்கள்.

நபியை கொள்வதற்காக ஒரு பள்ளியை கட்டினார்கள் அந்தப் பள்ளிக்கு நபியவர்கள் தொழுகைக்காக வந்ததும் நபியவர்களுடன் சேர்த்து தீ வைத்து விட திட்டம் தீட்டினார்கள். திருமறைக் குர்ஆனின் ஒன்பதாவது அத்தியாயம் இதைப் பற்றி விளக்குகிறது.

தீங்கிழைப்பதற்காகவும், (ஏக இறைவனை) மறுப்பதற்காகவும்,நம்பிக்கை கொண்டோரிடையே பிரிவை ஏற்படுத்திட வும்இதற்கு முன் அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் எதிராகப் போரிட்டோருக்குப் புகலிடமாகவும் ஒரு பள்ளிவாசலை ஏற்படுத்திக் கொண்டோர் 'நாங்கள் நல்லதைத் தவிர வேறெதனையும் நாடவில்லைஎன்று சத்தியம் செய்கின்றனர். 'அவர்கள் பொய்யர்களே'என்று அல்லாஹ் சாட்சி கூறுகிறான்.

அதில் நீர் ஒரு போதும் வணங்காதீர்! ஆரம்ப நாள் முதல் இறையச்சத்தின் அடிப்படையில் நிர்மாணிக் கப்பட்ட பள்ளிவாசலே நீர் வணங்கு வதற்குத் தகுதியானது. அதில் தூய்மையை விரும்பும் ஆண்கள் உள்ளனர். அல்லாஹ் தூய்மையானவர்களை விரும்புகிறான்.

அல்லாஹ்வைப் பற்றிய அச்சத்தின் மீதும்அவனது திருப்தியின் மீதும் தனது கட்டடத்தை நிர்மாணித்தவன் சிறந்தவனாஅல்லது அரிக்கப்பட்டு விழுந்து விடும் கட்டடத்தை கரை ஓரத்தில் கட்டி அதனுடன் நரகத்தில் சரிந்து விழுந்து விட்டவன் சிறந்தவனாஅநீதி இழைத்த கூட்டத்திற்கு அல்லாஹ் நேர் வழி காட்ட மாட்டான்.

அவர்களின் உள்ளங்கள் வெடித்துச் சிதறினால் தவிர அவர்கள் கட்டிய கட்டடம் அவர்களின் உள்ளங் களில் உள்ள சந்தேகத்தின் அடையாள மாக இருந்து கொண்டே இருக்கும். அல்லாஹ் அறிந்தவன்;ஞானமிக்கவன். (09 : 107 - 110)

இறைவனின் தூதரையே கொலை செய்யும் அளவுக்கு காபிர்களின் உள்ளத்தில் குரோதத் தீ கொழுந்து விட்டு எறிந்தது. ஆனால் அல்லாஹ்வோ காபிர்களின் இந்த தீய எண்ணத்தை நாசப்படுத்தி இறைவனின் தூதரை காப்பாற்றினான்.

நமது வாழ்க்கையில் சாதாரமாக அடுத்தவர்கள் மீது நமக்கு ஏற்படும் வெருப்பு, கோபங்கள் தான் சிறிது சிறிதாக சேர்ந்து குரோதத்தை உருவாக்கி உறம் போடுகிறது.

இந்த குரோத குணம் கொண்டவர்கள் சரியாக பேசுவதில்லை, பேசினாலும் உள்ளொன்று வைத்து வெளியில் ஒன்றைப் பேசுவார்கள். மற்றவர்களுக்கு மத்தியில் நம்மைப் பற்றிப் பேசும் போது புகழ்ந்து பேசுபவர்கள் அல்லது நல்ல விஷயங்களைப் பேசுபவர்கள் நாம் நகர்ந்தவுடன் அல்லது நாம் இல்லாத இடத்தில் நம்மைப் பற்றி இழிவாக, பொய்யான தகவல்களை எல்லாம் பேசுவார்கள். இவர்களின் இப்படிப்பட்ட வேலைகளுக்குக் காரணம் குரோதம் என்ற தீய குணம் தானே தவிர வேறில்லை.

நயவஞ்சகத்தை உண்டாக்கும் குரோதம்.

உள்ளொன்று வைத்து வெளியில் ஒன்றைப் பேசும் நயவஞ்சகத் தனத்தை அல்லது நம்மிடம் நல்லதையும் வெளியில் நமக்கெதிராகவும்  செயல்பட வைக்கும் பண்மை இந்த குணம் உண்டாக்குகிறது.

நபியவர்களின் காலத்தில் நபியவர்களை இறைவனின் தூதராக ஏற்றுக் கொண்டதாக சிலர் சொல்லிக் கொண்டார்கள் ஆனால் உண்மையில் அவர்கள் முஹம்மது (ஸல்) அவர்களை அல்லாஹ்வின் தூதராக ஏற்றுக் கொள்ளவே இல்லை.

ஆனால் நபியிடம் வரும் போது நபியவர்களை சொல்வதை சரி காண்பார்கள். நபியின் கருத்துக்களை ஏற்றுக் கொள்வதைப் போல் காட்டிக் கொள்வார்கள். நபியவர்களை விட்டு காபிர்கள் இருக்கும் இடத்திற்கு சென்றால் நபிக்கு மாற்றமாக இஸ்லாத்திற்கும், முஸ்லீம்களுக்கும் எதிராக செயல்படுவார்கள்.

அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பினோம் எனக் கூறுவோரும் மனிதர்களில் உள்ளனர் (ஆனால்) அவர்கள் நம்புவோர் அல்லர்.அல்லாஹ்வையும் நம்பிக்கை கொண்டோரையும் அவர்கள் ஏமாற்ற நினைக்கின்றனர்.(உண்மையில்) தம்மைத் தாமே ஏமாற்றிக் கொள்கின்றனர் அவர்கள் உணர்வதில்லை.

அவர்களின் உள்ளங்களில் நோய் இருக்கிறது. அல்லாஹ்வும் அவர்களுக்கு நோயை அதிகமாக்கிவிட்டான். பொய் சொல்வோராக இருந்ததால் அவர்களுக்கு துன்புறுத்தும் வேதனை உண்டு. புமியில் குழப்பம் செய்யாதீர்கள் என்று அவர்களிடம் கூறும் போது நாங்கள் சீர்திருத்தம் செய்வோரே எனக் கூறுகின்றனர்.

கவணத்தில் கொள்க அவர்களே குழப்பம் செய்பவர்கள் எனினும் உணர மாட்டார்கள். (28 -12)

உள்ளொன்று வைத்து வெளியொன்று பேசும் தீய நயவஞ்சக குணத்தைக் கூட இந்த குரோதம் ஏற்படுத்தி விடுகிறது.

முஹம்மது (ஸல்) அவர்கள் இறைவனின் தூதர் தான் என்பதை தெளிவாக அறிந்திருந்த யுதர்கள், அவர்களின் உள்ளங்களில் இருந்த குரோத குணத்தின் காரணமாக அவர்களை ஏற்றுக் கொள்ள மறுத்தார்கள். மறுத்த்தது மட்டுமின்றி நபியவர்களுக்கு எதிராக செயல்பட்டதும் அவர்கள் தாம் என்பதை பல வசனங்களில் திருமறைக் குர்ஆன் நமக்கு மிகவும் அளகாக தெளிவுபடுத்துகிறது.

தவிர்ந்து கொள்வது எப்படி?

குரோதம் என்ற தீய குணத்தை தவிர்ந்து கொள்ள வேண்டுமானால் நமது உள்ளத்தில் தீய எண்ணங்கள் ஏற்படும் போதே முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்.

தீய எண்ணங்கள் ஏற்படும் போது அவுது பில்லாஹி மினஷ் ஷைதானிர் ரஜீம்” என்று கூறி அல்லாஹ்விடம் நாம் பாதுகாவல் தேடிக் கொள்ள வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள். (புகாரி - 3276)

நமக்கு அடுத்தவர்கள் தீயது செய்ய நினைத்தாலும் நாம் அடுத்தவர்களுக்கு நம்மால் முடிந்தவரை நல்லது மாத்திரமே செய்ய வேண்டும். அப்படி செய்கின்ற பட்சத்தில் நமது நல்லண்ணம் அதிகரித்து, தீய எண்ணங்கள் நம்மை விட்டும் விளகுவதற்கு அது மிகப்பெரிய வாய்ப்பாக அமைந்து விடுகிறது.

எந்த சமுதாயம் தம்மை தாமே சீர்திருத்திக் கொள்ளவில்லையோ அந்த சமுதாயத்தை அல்லாஹ்வும் சீர்திருத்தமாட்டான். (அல்-குர்ஆன்3: 11)

வாழும் வரை நல்லவர்களாக வாழ்ந்து நாளை மறுமையில் வெற்றி பெற்று சுவர்க்கம் என்ற அழகிய இடத்தை நாம் அடைவதற்கு அல்லாஹ் அருள் புரிவானாக! 

                                         நன்றி இணையம் rasminmisc.blogspot.com




                                                       

Read more »