Sunday, December 25, 2011

'கிறிஸ்மஸ் பண்டிகை' ஓர் இஸ்லாமிய பார்வை



மனிதன் சந்தோசத்திற்கு எப்போதுமே அடிமை தான். மகிழ்ச்சிக்காக மனிதன் படாதபாடுபடுவதை கண்கூடாகக் கண்டிருக்கிறோம். அதே நேரம் ஒவ்வொரு மனிதனைப் பொறுத்தவரையிலும் சந்தோசத்தைத் தரும் விடயங்கள் வித்தியாசப்படுகின்றன. தனி நபர் சந்தோசத்தை விட ஒரு சமூகத்தின் மகிழ்ச்சி தான் முக்கியமான ஒன்றாகும்.

ஒவ்வொரு மதத்தைப் பின்பற்றுபவர்களுக்கும் அந்தந்த மதத்தோடு தொடர்பான பண்டிகைகள், கொண்டாட்டங்கள் குட்டிப்போட்ட பூனையைப் போல் வருடாவருடம் சுற்றிச் சுற்றி வந்துக் கொண்டேயிருக்கின்றன. அந்த வகையில் கிறிஸ்மஸ் பண்டிகை, பரவலாக கிறிஸ்தவர்களால் வருடா வருடம் டிசம்பர் மாதத்தின் கடைசிப் பகுதியில் உலகின் எல்லாப் பகுதிகளிலும் கொண்டாடப்பட்டு வருகின்றது.

எனவே முஸ்லீம்களாகிய நாம் எல்லா நிலைகளிலும் இஸ்லாத்தின் நிழலின் கீழ் நின்று தான் எந்த ஒரு விடயத்தையும் அணுகவேண்டும் என்ற கட்டாய நிலை இருக்கின்றது. ஏனென்றால் நாம் மறுமையை மையமாகக் கொண்டு வாழ்க்கையை ஓட்டிச்செல்பவர்கள். 
உலகில் கிடைக்கும் சந்தோசத்தை இழந்து விடக்கூடாது என்ற நிலை இருக்குமேயானால் கிறிஸ்மஸ் பண்டிகையில் முஸ்லீம்களும் பங்குகொள்ளலாமா? என்ற கேள்விக்கு விடைகாணத்தான் வேண்டும்.

முதலில் கிறிஸ்மஸ் கொண்டாட்டத்தைப் பற்றி கிறிஸ்தவர்களின் வேதநூலான பைபிள் என்ன சொல்கின்றது என்பதனை சற்று ஆராய்ந்து விட்டு கேள்விக்கான விடைக்க வருவோம்.

பைபிளின் பழைய ஏற்பாட்டில்: -

'புறஜாதிகளின் மார்க்கத்தைக் கற்றுக் கொள்ளாதிருங்கள். ஜனங்களின் வழிபாடுகள் வீணாகயிருக்கிறது. காட்டில் ஒரு மரத்தை வெட்டுகிறார்கள். அது தச்சன் கையாடுகிற வாச்சியால் பணிப்படும். வெள்ளியினாலும் பொன்னினாலும் அதை அலங்கரித்து, அது அசையாதபடிக்கு அதை ஆணிகளாலும் சுத்திகளாலும் உறுதியாக்குகிறார்கள். அவைகள் பனையைப் போல நெட்டையாய் நிற்கிறது. அவைகள் பேச மாட்டாதவைகள், அவைகள் நடக்கமாட்டாததினால் சுமக்கப்படவேண்டும், அவைகளுக்குப் பயப்படவேண்டாம். அவைகள் தீமை செய்யக் கூடாது, நன்மை செய்யவும் அவைகளுக்குச் சக்தி இல்லையென்று கர்த்தர் சொல்லுகிறார்' (எரேமியா 10:2-4)

பைபிளின் இக்கூற்றிலிருந்து நாம் விளங்கக்கூடியது : -

கிறிஸ்மஸ் கொண்டாட்டமும், கிறிஸ்மஸ் மரம் நாட்டுவதும், அதை அலங்கரித்து வணங்குவதும் கிறிஸ்தவர்களின் மார்க்கத்தில் உள்ளவையன்று. கர்த்தர் விரும்பாத ஒன்று என்பதையும் நாம் அவர்களது பைபிளிலிருந்தே விளங்க முடிகின்றது. பைபிளின் போதனைக்கே கிறிஸ்தவர்கள் முரண்படுவது உண்மையில் ஆச்சரியமாகத்தான் இருக்கின்றது.

எனவே முஸ்லிம்களாகிய நாம் அடிப்படையே இல்லாத ஒன்றின் பக்கம் தலைசாய்ப்பது தவறானதாகும். இஸ்லாத்தைப் பொருத்தவரை கிறிஸ்மஸ் கொண்டாடுவதோ அல்லது அப்பண்டிகையில் கலந்து கொள்வதோ தடைசெய்யப்பட்ட ஒன்றாகும்.

மாற்று மத கலாச்சாரத்தைப் பின்பற்றும் முஸ்லிம்களின் நிலை?
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (மாற்று) சமுகத்தினருக்கு ஒப்பாக நடப்பவர் நம்மை சார்ந்தவர் இல்லை. அறிவிப்பவர் இப்னு உமர் (ரழி), நூல் அபூதாவூத் (3512)

அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: "உங்களுக்கு முன்னிருந்த(யூதர்கள் மற்றும் கிறிஸ்த)வர்கüன் வழிமுறைகளை நீங்கள் அங்குலம் அங்குலமாக, முழம் முழமாகப் பின்பற்றுவீர்கள். எந்த அளவிற்கென்றால் அவர்கள் ஓர் உடும்பின் பொந்துக்குள் புகுந்திருந்தால் கூட நீங்கள் அதிலும் புகுவீர்கள்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். நாங்கள், "அல்லாஹ் வின் தூதரே! (நாங்கள் பின்பற்றக் கூடிய வர்கள் என்று) யூதர்களையும் கிறிஸ்தவர் களையுமா நீங்கள் குறிப்பிடுகிறீர்கள்?'' என்று நாங்கள் கேட்டோம். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "வேறெவரை?'' என்று பதிலலித் தார்கள்(புஹாரி 3456)

எந்த ஒரு முஸ்லிம் மாற்று மதக் கலாச்சாரத்தைப் பின்பற்றுகிறாரோ அவர் நம்மை சார்ந்தவர் அல்ல என முஹம்மது நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். 

இன்று சில முஸ்லிம் சகோதரர்கள் தங்கள் அயலவர்களினதோ அல்லது நண்பர்களினதோ கிறிஸ்மஸ் வைபவங்களில் கலந்து கொள்ளக்கூடியவர்களாக உள்ளனர். அவர்களுடன் சேர்ந்து வாழ்த்துக் கூறக்கூடியவர்களாகவும் அவர்கள் கொண்டாட்டத்திற்காக செய்யும் அத்தனை நடவடிக்கைகளிலும் பங்குபற்றக்கூடியவர்களாகவும் உள்ளனர். 

அல்லாஹ்வை மட்டும் வணங்கக்கூடியவர்களாக இருந்து கொண்டு ஈஸா (அலை) அவர்களை கடவுளாகக் கருதி கொண்டாடப்படும் பண்டிகையில் கலந்து அந்த நடவடிக்கைகளுக்கு தாமும் தம் ஒத்துழைப்பை வழங்குகின்றனர். அதாவது அந்நிய மத சகோதரர்களை, நண்பர்களை நரக நெருப்பிலிருந்து காப்பாற்ற வேண்டிய நாம் அவர்களுடன் சேர்ந்து அவர்களுக்கு ஒப்பாக நடந்து நமது இஸ்லாமிய கொள்கையை விட்டுக் கொடுக்கக்கூடியவர்களாக மாறுவது மிகவும் வேதனைக்குரியதாகும். மேலும், இப் பண்டிகையின்போது தயாரிக்கப்படும் ‘கிறிஸ்மஸ் கேக்குகளில் மது வகைகள் கலக்கப்படுகின்றன. இதை அறிந்து கொண்டே நம் முஸ்லிம் சகோதரர்கள் அவற்றை உண்ணக்கூடியவர்களாக உள்ளனர். 

நம்பிக்கைக் கொண்டோரே! மது, சூதாட்டம், பலிபீடங்கள், (குறி கேட்பதற்கான) அம்புகள் ஆகியவை அருவருப்பானதும், ஷைத்தானின் நடவடிக்கையுமாகும். எனவே, இதிலிருந்து விலகிக் கொள்ளுங்கள்! வெற்றி பெறுவீர்கள். (அல்குர்ஆன் 5:90)

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் அபூ தல்ஹா (ரலி) அவர்கள் வீட்டில் மக்களுக்கு மது பரிமாறு பவனாக இருந்தேன். அந்த நாட்களில் பேரீச்சம் பழ மதுவை(பேரீச்ச மரக் கள்ளை)யே அவர்கள் குடித்து வந்தனர். (மதுவைத் தடை செய்யும் இறைவசனம் அருளப்பட்டவுடன்), அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பொது அறிவிப்புச் செய்பவரை அழைத்து, "(மக்களே!) மது தடை செய்யப்பட்டு விட்டது'' என்று அறிவிக்கும்படி கட்டளையிட்டார்கள். அபூ தல்ஹா (ரலி) அவர்கள் என்னிடம், "வெளியே சென்று இதை ஊற்றிவிடு'' என்று கூறினார்கள். நான் வெளியே சென்று அதை (சாலையில்) ஊற்றி விட்டேன். மதீனா நகரின் தெருக்களில் அது ஓடியது.  மக்களில் சிலர், "மது தங்கள் வயிறுகளில் இருக்கும் நிலையில் பல பேர் கொல்லப்பட்டிருக்கிறார்களே! (அவர்களின் நிலை என்ன?)'' என்று கேட்டார்கள்.  அப்போது தான், "இறைநம்பிக்கை கொண்டு நற்செயல்கள் புரிகின்றவர்கள் (முன்னர்) எதையும் உண்டவை பற்றி அவர்கள் மீது குற்றமில்லை'' (5:93) என்னும் திருக்குர்ஆன் வசனம் அருளப்பட்டது. (புஹாரி 2464)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உலகில் மது அருந்திவிட்ட பிறகு (அதைக் கைவிட்டு) அதற்காகப் பாவமன்னிப்புக் கோராதவன் மறுமையில் (சொர்க்கத்தின்) மதுவை அருந்தும் பேற்றை இழந்துவிடுவான். இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (புஹாரி 5575)

மேலும், கிறிஸ்தவர்கள் பன்றி இறைச்சியை விரும்பி சாப்பிடக்கூடியவர்களாக உள்ளனர். அவர்கள் நமது வீட்டுக்கு உணவு ஏதேனும் அனுப்பினால் அவ்வுணவில் அல்லாஹ்வால் தடுக்கப்பட்ட ஹராமானவை இல்லாதிருந்தால் தாராளமாக சாப்பிடலாம். 

தாமாகச் செத்தவை, இரத்தம், பன்றியின் இறைச்சி, அல்லாஹ் அல்லாதோருக்காக அறுக்கப்பட்டவை ஆகியவற்றையே அவன் உங்களுக்குத் தடை செய்திருக்கிறான். யார் வரம்பு மீறாதவராகவும், வலியச் செல்லாதவராகவும் நிர்ப்பந்திக்கப்படுகிறாரோ அல்லாஹ் மன்னிப்பவன். நிகரற்ற அன்புடையோன். (அல்குர்ஆன் 16:115)


 
கிறிஸ்மஸ் பண்டிகையின் போது மது, புகைத்தல், இசை, வீணான கேளிக்கைகள் போன்ற எத்தனையோ தீமைகள் அங்கே தலை விரித்தாடுவதை நாம் பார்க்க முடியும். அங்கு பங்கேற்கின்ற போது ஏதாவதொரு தீமையில் நாம் விழவேண்டிய சூழ்நிலை உருவாகும். நமது நன்பருக்காக என்று ஏதோ ஒன்றை நாம் செய்யப் போய் நாமேன் தீமைகளில் விழவேண்டும்?

அல்லாஹ்வின் வசனங்கள் மறுக்கப்பட்டு, கேலி செய்யப்படுவதை நீங்கள் செவியுற்றால் அவர்கள் வேறு பேச்சுக்களில் ஈடுபடும் வரை அவர்களுடன் அமராதீர்கள்! (அவர்களுடன் அமர்ந்தால்) அப்போது நீங்களும் அவர்களைப் போன்றவர்களே என்று இவ்வேதத்தில் உங்களுக்கு அவன் அருளியுள்ளான். நயவஞ்சகர்களையும், (தன்னை) மறுப்போர் அனைவரையும் அல்லாஹ் நரகில் ஒன்று சேர்ப்பான். (அல்குர்ஆன் 4:140)

உங்களில் ஒருவர் தீமையைக் கண்டால் கையால் தடுக்கட்டும் அதற்கு சக்தி இல்லாதவர் வாயால் தடுக்கட்டும் அதற்கும் சக்தி இல்லாதவர் மனதினால் வெறுத்து ஒதுங்கட்டும் இது தான் ஈமானில் மிக பலவீனமாக நிலையாகும் (முஸ்லிம் 70)
 
எனவே தீமைகளை விட்டு ஒதுங்குவோம், தீமைகளுக்கு விலை போகாமல் நம் உள்ளங்களைக் கொஞ்சம் ஒதுக்கி வைப்போம்.முடிந்த வரை தீமைகளை அழிக்க முயற்சிப்போம்.